கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் எரிவாயுக் கசிவால்தான் விபத்து

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் எரிவாயுக் கசிவால்தான் விபத்து ஏற்பட்டதாக மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் எரிவாயுக் கசிவால்தான் விபத்து

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் எரிவாயுக் கசிவால்தான் விபத்து ஏற்பட்டதாக மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 
கேரள மாநிலம், கொச்சி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த எண்ணெய் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதில் 5 பேர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர். 
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அந்தக் கப்பலுக்கு புதன்கிழமை நேரில் சென்று ஆய்வு நடத்தினேன். அப்போது தீ விபத்து ஏற்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. கப்பலின் கீழ்ப் பகுதியில் மூன்றாவது தளத்தில் எரிவாயுக் கசிவு காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 
இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தக் குழு அமைக்கப்படும். இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும். முதல்கட்டமாக ரூ. 25 ஆயிரம் மற்றும் 2 மாத ஊதியம் உடனடியாக வழங்கப்படும். மேலும், குடும்பத்தில் ஒருவருக்குத் தகுதியின் அடிப்படையில் வேலையும், இறந்தவர்களின் குழந்தைகள் கல்லூரிப் படிப்பு வரை பயில கல்வி உதவித்தொகையும் வழங்கப்படும். 
இதில், 11 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்கள் சிகிச்சை முடிந்து பணிக்குத் திரும்பும் வரையில் ஊதியம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் லாபகரமாக இயங்கும் எந்த நிறுவனத்தையும் மத்திய அரசு மூடாது. 
கோயில்கள் வழிபாட்டுத் தலங்களாகத்தான் இருக்க வேண்டும். கோயில்களை சந்தைகளாக மாற்றக்கூடாது. ஆகவே, கோயில்களில் உள்ள கடைகளை அகற்ற வேண்டும் என்றார்.
அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு: முன்னதாக, கொச்சி கப்பல் கட்டும் தளத்துக்கு நேரில் சென்று விபத்து நிகழ்ந்த இடத்தை பார்வையிட்ட பொன். ராதாகிருஷ்ணன், அதுதொடர்பான முதல்கட்ட விசாரணை விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி அதுகுறித்த அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்குமாறு கொச்சி கப்பல் கட்டுமான நிறுவனத்துக்கு (சிஎஸ்எல்) அவர் உத்தரவிட்டார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com