ரேஷன் கடையில் பிளாஸ்டிக் அரிசி விற்றதாகப் புகார்: உணவுப் பாதுகாப்புத் துறையினர் விசாரணை

திருப்பூரில் நியாய விலைக் கடையில் பிளாஸ்டிக் அரிசி விற்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து உணவுப் பாதுகாப்புத் துறையினர் விசாரணை நடத்தினர்.

திருப்பூரில் நியாய விலைக் கடையில் பிளாஸ்டிக் அரிசி விற்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து உணவுப் பாதுகாப்புத் துறையினர் விசாரணை நடத்தினர்.
திருப்பூர் மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட 48-ஆவது வார்டு, சூசையார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயமேரி. இவர், தனது மகன் ராஜாவுடன் வசித்துவருகிறார். அப்பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் 25 கிலோ மூட்டைகளில் விற்பனை செய்யப்படும் பொன்னி புழுங்கல் அரிசி இரண்டு மூட்டைகள் தலா ரூ.1,220 கொடுத்து கடந்த திங்கள்கிழமை வாங்கியுள்ளார்.
வாங்கி வந்த அரிசியை புதன்கிழமை காலை எடுத்து சமைக்கும் முன், பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஊற வைத்துள்ளார். ஊற வைத்த அரிசியில் பாதியளவு தண்ணீரில் மிதந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அந்த அரிசியை சமைத்து, உருண்டையாக்கி சுவற்றில் வீசியபோது, சிதறாமல் குதித்து விழுந்துள்ளது. தரையில் வீசியபோதும் உருண்டு ஓடியுள்ளது. அதற்குப் பிறகு, விற்பனை செய்யப்பட்டது பிளாஸ்டிக் அரிசியாக இருக்கலாம் என்று கருதிய ஜெயமேரி, அருகில் வசிப்போர் சிலரை அழைத்துக் கொண்டு சென்று, நியாய விலைக் கடை பணியாளரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், அங்கு அவருக்கு உரிய பதில் கிடைக்கப் பெறவில்லை.
இதனால், உணவுப் பாதுகாப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுவலர் முருகேசன் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, புகார் தெரிவிக்கப்பட்ட அரிசியிலிருந்து மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், புகாரின் பேரில் விசாரணை நடத்தி, மாதிரி சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி உள்ளோம். ஆய்வின் அறிக்கையில் தெரிவிக்கப்படும் தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com