ஐஎன்எக்ஸ் மீடியா கருப்புப் பண முறைகேடு வழக்கு: கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது! 

ஐஎன்எக்ஸ் மீடியா கருப்புப் பண முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரன் ராமனை அமலாக்கத்துறை கைது செய்தது.
ஐஎன்எக்ஸ் மீடியா கருப்புப் பண முறைகேடு வழக்கு: கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது! 

சென்னை: ஐஎன்எக்ஸ் மீடியா கருப்புப் பண முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரன் ராமனை அமலாக்கத்துறை கைது செய்தது.

கடந்த 2007-ஆம் ஆண்டில் ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.307 கோடி வெளிநாட்டு முதலீட்டைப் பெற அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததில் பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றது என்றும், இதில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம்தான் அந்த நிறுவனத்துக்கு அனுமதி பெற்றுத் தந்தார் என்றும் சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.  

மேலும், அந்த நிறுவனம் கார்த்தியின் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்த நிறுவனத்திடம் இருந்து அவர் பெருமளவில் பணம் பெற்றார் என்றும் குற்றச்சாட்டு உள்ளது.  

இந்த விவகாரத்தில் நடைபெற்ற கருப்புப் பண முறைகேடு தொடர்பாக கடந்த ஆண்டு மே மாதம் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜராகாததை அடுத்து அவரை கண்காணிக்கப்படும் நபராக அறிவித்த சிபிஐ, அவருக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ் வெளியிட்டது. அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  

இதனை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தொடுத்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றமே முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. 

ஐஎன்எக்ஸ் மீடியா கருப்புப் பண முறைகேடு வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் அமலாக்கத் துறை விசாரணை அதிகாரி முன் வியாழக்கிழமை தில்லியில் நேரில் ஆஜரானார். 

இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் நண்பர்கள் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வெள்ளியன்று காலை முதல் சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.  அதே சமயம் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வதற்கு கடுமையான நிபந்தனைகளுடன் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.

தற்சமயம் 'திடீர்' திருப்பமாக கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரன் ராமனை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. அவர் உடனடியாக தில்லி கொண்டு செல்லப்பட்டு விசாரணை தொடரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் கார்த்தி சிதம்பரத்தின் கட்டத்தை நோக்கிய முக்கியமான நகர்வாகவும் இது பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com