காவிரி நதிநீர் தீர்ப்பு:  முதல்வர் தலைமையில் வரும் 22-ந் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்!

காவிரி நதிநீர் தீர்ப்பு விவகாரம் குறித்து விவாதிக்க, வரும் 22-ந் தேதி தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
காவிரி நதிநீர் தீர்ப்பு:  முதல்வர் தலைமையில் வரும் 22-ந் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்!

சென்னை: காவிரி நதிநீர் தீர்ப்பு விவகாரம் குறித்து விவாதிக்க, வரும் 22-ந் தேதி தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே நிலவி வரும் காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. அதில் காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா திறந்து விட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்த காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அம்சங்கள் குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசிக்க, முதல்வர் பழனிசாமி திங்கள் காலை தலைமைச் செயலகத்துக்கு வந்தார். தனது அறையில் முக்கிய அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித்துறை செயலாளர், காவிரி நீர் பங்கீட்டு கண்காணிப்பு அதிகாரிகள், மூத்த அரசு வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட வல்லுனர்களுடன் அவர் விரிவான ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் பேசும் பொழுது கூறியதாவது:-

காவிரி நதிநீர் விவகாரம் முக்கியமானது என்பதால் சட்டவல்லுநர்கள், தொழில் நுட்ப வல்லுனர்களுடன்  ஆலோசனை நடத்தினோம். காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை கண்டிப்பாக நிலை நாட்டப்படும். இந்த விவகாரம் தொடர்பாக வரும் 22ந் தேதி முதல் அமைச்சர்  தலைமையில்  அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும்.

இதில் பங்கு பெற வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும்.  கூட்டத்தில் அனைத்துக்கட்சித் தலைவர்களின் ஆலோசனையை பெற்று அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெளிவாக முடிவு எடுக்கப்படும்

காவிரி தீர்ப்பு தொடர்பாக அரசுத் தரப்பில் எப்படியும் கூட்டம் நடத்தப்படும் என்று தெரிந்தே, எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினும் அனைத்துக்கட்சி கூட்டம் அறிவித்து உள்ளார்.

இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com