சேலத்தில் பொலிவுறு நகர திட்டத்தில் ரூ.1,908 கோடியில் மேம்பாட்டுப் பணிகள்: முதல்வர் 

சேலத்தில் ஸ்மார்ட் சிட்டி (பொலிவுறு நகரம்) திட்டத்தில் ரூ.1,908.60 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்று, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
சேலத்தில் பொலிவுறு நகர திட்டத்தில் ரூ.1,908 கோடியில் மேம்பாட்டுப் பணிகள்: முதல்வர் 

சேலத்தில் ஸ்மார்ட் சிட்டி (பொலிவுறு நகரம்) திட்டத்தில் ரூ.1,908.60 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்று, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
சேலம் பள்ளப்பட்டியில் மாநகராட்சிக்கு உள்பட்ட 362 சாலைகளை ரூ.94.39 கோடி மதிப்பில் சீரமைக்கும் பணியை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசியது:
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் புதை சாக்கடை, குடிநீர்க் குழாய் பதித்தல் மற்றும் மின் கேபிள் பதிக்க தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணி துவங்கியுள்ளது. இதற்காக மொத்தம் ரூ.142 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக 362 சாலைகள் ரூ.94.39 கோடி மதிப்பில் சீரமைப்புப் பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகள் அந்தந்தப் பகுதிகளில் புதை சாக்கடை, குடிநீர்க் குழாய் பதித்தல் போன்ற பணிகள் முடிவடைந்த பிறகு துவக்கப்படும்.
சேலம் நகரை பொலிவுறு நகரம் (ஸ்மார்ட்) திட்டத்தில் மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது. திடக்கழிவு மேலாண்மை, அடுக்குமாடி வாகன நிறுத்தும் இடம், வ.உ.சி. மார்க்கெட், பழைய பேருந்து நிலையம், போஸ் மைதானம், நேரு கலையரங்கம் திருமணிமுத்தாறு அபிவிருத்தி பணி உள்ளிட்ட 10 பணிகள் ரூ.1,908.60 கோடியில் நிறைவேற்றப்பட உள்ளன. இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வேறு எந்த நகரங்களில் இல்லாத அளவுக்கு சேலத்தில் அதிக பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. திருவாக்கவுண்டனூர் புறவழிச்சாலை மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.
அதேபோல ஏ.வி.ஆர். ரவுண்டானா மேம்பால பணிகள் துரிதமாக நடந்து வருன்றன. இந்த பாலம் மூன்று மாதங்களில் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்படும். சேலம் உருக்காலை மற்றும் சேகோ சர்வ் சாலை சந்திப்பு அருகே மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்கும் வகையில் பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. ஐந்து சாலை சந்திப்பில் ரூ.350 கோடியில் கட்டப்பட்டு வரும் பாலம் பணிகள் குறித்த காலத்தில் முடிக்கப்பட்டு திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ராசிபுரம் அருகே ஆட்டையாம்பட்டி பிரிவு தொடங்கி ஓமலூரை இணைக்கும் வகையில் புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சேலத்தில் நவீன பேருந்து நிலையம் (பஸ் போர்ட்) அரபி கல்லூரி அருகில் 70 ஏக்கரில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விமான நிலையத்தில் உள்ள வசதிகளை போல, பேருந்து நிலையத்திலும் வசதி ஏற்படுத்தப்படும்.
தமிழகத்தில் சாலை விரிவாக்கப் பணிகளுக்கு மத்திய அரசு போதிய ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. அந்தவகையில் சேலம் } திருப்பத்தூர் சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது. திருச்செங்கொடு, சங்ககிரி, ஓமலூர் வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. மேலும் ஆத்தூர் } திருப்பத்தூர் சாலை விரிவாக்கப் பணிகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது. மத்திய அரசு அனுமதி கிடைத்துள்ளதால், விரைவில் டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கப்படும். அதேபோல நாமக்கல்}திருச்சி நான்கு வழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
சேலம் அரசு மருத்துவமனையில் இதயம் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆட்சி ஓராண்டை நிறைவு செய்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த ஆட்சி 10 நாள் இருக்குமா, 20 நாள் இருக்குமா என எதிர்க்கட்சியினர் பேசி வந்தனர். தற்போது எதிர்கட்சியினர் மூக்கின் மேல் விரல் வைக்கும் வகையில் ஆட்சி நடந்து வருகிறது.
மக்களின் தேவைகளை அறிந்து நிவர்த்தி செய்து வருகிறோம். அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தில் இந்த ஆண்டில் 1 லட்சம் பேருக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.
நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ், எம்.பி. வி.பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ}க்கள் எஸ்.செம்மலை, ஜி.வெங்கடாசலம், ஏ.பி.சக்திவேல், கு.சித்ரா, மனோன்மணி, வெற்றிவேல், தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்.இளங்கோவன், மாநகராட்சி ஆணையர் ரெ.சதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com