தஷ்வந்த் குற்றவாளி: உச்சபட்ச தண்டனை கோரும் ஹாசினி தரப்பு

போரூரைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொன்ற வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி என செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தஷ்வந்த் குற்றவாளி: உச்சபட்ச தண்டனை கோரும் ஹாசினி தரப்பு


செங்கல்பட்டு: போரூரைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொன்ற வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி என செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், தஷ்வந்தின் குற்றங்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபனமானதாக தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். தஷ்வந்துக்கு வழங்கப்படும் தண்டனை விவரத்தை நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.

ஆள் கடத்தல், கொலை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் தஷ்வந்த் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொன்று, பெட்ரோல் ஊற்றி எரித்த வழக்கில் தஷ்வந்துக்கு எதிராக சி.ஆர்.பி.சி.  201, 104, 354, 363, 366 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி வேல்முருகன் குறிப்பிட்டுள்ளார்.

சிறுமி ஹாசினியின் பெற்றோர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் கண்ணதாசன், இந்த வழக்கில் தீவிர கவனம் செலுத்தி, தஷ்வந்துக்கு எதிரான பல்வேறு ஆதாரங்களை நீதிமன்றத்தின் முன் வைத்தார். 

வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி என்று தீர்ப்பளித்தார். தஷ்வந்த் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து, குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்கும்படி வழக்குரைஞர் கண்ணதான் வலியுறுத்தினார்.

தண்டனை குறித்த வாதத்தின் போது தனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு தஷ்வந்த் வலியுறுத்தினார்.

இதற்கிடையே, குற்றவாளி தஷ்வந்துக்கு இரட்டை ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக ஒரு சாரார் தெரிவிக்கின்றனர். அதே சமயம், 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில், முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக மரண தண்டனை விதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

பின்னணி: சென்னையை உலுக்கிய 6 வயது சிறுமி ஹாசினி கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

சென்னை மாங்காட்டைச் சேர்ந்த ஹாசினி, வன்கொடுமைக்கு உள்ளாகி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சிறுமி வசித்து வந்த அதே குடியிருப்பில் தங்கியிருந்த தஷ்வந்த் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விரைவில் தண்டனை விவரம் அறிவிக்கப்பட உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com