கலாமின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்காதது ஏன்? ராமேஸ்வரத்தில் கமலிடம் செய்தியாளர் கேள்வி

ராமேஸ்வரத்தில் அப்துல் கலாமின் வீட்டில் இருந்து கமலஹாசன் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். பிறகு மீனவப் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார்.
கலாமின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்காதது ஏன்? ராமேஸ்வரத்தில் கமலிடம் செய்தியாளர் கேள்வி

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் அப்துல் கலாமின் வீட்டில் இருந்து கமலஹாசன் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். பிறகு மீனவப் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார்.

ராமேஸ்வரத்தில் மீனவ மக்களுடன் நடைபெற்ற நிகழ்ச்சியில், மீனவப் பிரதிநிதிகளை மேடையேற்றிய கமல், அவர்களது பிரச்னைகளைப் பற்றி கேட்டறிந்தார்.

தங்களது பிரச்னைகள் குறித்து பேசிய மீனவப் பிரதிநிதிகளின் பேச்சினை முழுவதும் கேட்ட கமலஹாசன், யாருக்கும் பொன்னாடை போத்தும் பழக்கம் எங்களுக்கு இல்லை. எனவே, பொன்னாடைக்குப் பதிலாக தன்னைப் போற்றுவதாகக மீனவப் பிரதிநிதிகளை கட்டிப் பிடித்து வாழ்த்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் பேசியதாவது, பன்னாட்டு தாய்மொழி நாள் என்பதால் இன்று எனது அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளேன்.

அரசியலில் எனக்கு பிடித்தவர்களில் ஒருவர் சந்திரபாபு நாயுடு. அவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தார். கொள்கைகள் பற்றி கவலைப்பட வேண்டாம். மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி மட்டும் சிந்திக்குமாறு கூறினார்.

கடந்த 50 ஆண்டுகளில் ராமேஸ்வரம் முன்னேறவில்லை. உலக நாயகனாக இருந்த நான் நம்மவராக இருக்கவே ஆசைப்படுகிறேன்.

கலாம் எனது ஆதர்ச மனிதர். கலாம் வீட்டில் இருந்து பயணத்தைத் தொடங்கியதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை. கலாம் பயின்ற பள்ளிக்குச் செல்ல நினைத்ததில் அரசியல் இல்லை. பள்ளிக்குச் செல்வதைத் தான் தடுக்க முடியுமே தவிர, பாடம் கற்பதைத் தடுக்க முடியாது.

தடைகளைக் கடந்து சரித்திரம் படைக்க வேண்டும் என்றாலும் அதற்கு நான் தயார். சினிமாவை விட அரசியலில் பொறுப்புகள் அதிகம்.

கலாமின் இறுதிச் சடங்கில் பங்கேற்காதது பற்றிய கேள்விக்கு பதிலளித்த கமல், நான் இறுதி ஊர்வலங்களில் பங்கேற்பதில்லை. எனது நம்பிக்கை அப்படி என்று கூறினார்.

இதுவரை ரசிகர்களின் உள்ளங்களில் வாழ்ந்த நான் இனி அவர்களது இல்லங்களில் வாழ ஆசைப்படுகிறேன். மதுரையில் என் கொள்கைகள் உங்களுக்குப் புரியும் வகையில் பேசுவேன் என்று கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com