திருச்சியில் அரசு அதிகாரிகளுடன் ஆளுநர் ஆய்வு

மத்திய, மாநில அரசுகளின் திட்ட செயல்பாடுகள் குறித்து பல்வேறு துறை அலுவலர்களுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், திருச்சியில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
திருச்சியில் அரசு அதிகாரிகளுடன் ஆளுநர் ஆய்வு

மத்திய, மாநில அரசுகளின் திட்ட செயல்பாடுகள் குறித்து பல்வேறு துறை அலுவலர்களுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், திருச்சியில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
திருச்சி சுற்றுலா மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மாநகரக் காவல் துறை ஆணையர் அமல்ராஜ், மாநகராட்சி ஆணையர் ந. ரவிச்சந்திரன், சார்-ஆட்சியர் கமல் கிஷோர், அரசு மருத்துவக் கல்லூரி டீன் அனிதா மற்றும் வேளாண்மைத் துறை, வருவாய்த் துறை, சுகாதாரத் துறை, உள்ளாட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டத்தை நடத்தினார்.
நண்பகல் 12 மணி முதல் மதியம் 2 மணி வரை ஆய்வு மேற்கொண்ட ஆளுநர், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களின் தற்போதையை நிலை குறித்து கேட்டறிந்தார். 'தூய்மை இந்தியா' திட்டத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளை அனைத்துப் பகுதிகளிலும் விரிவுபடுத்தவும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அப்போது அவர் அறிவுறுத்தினார்.
மனுக்கள் பெறுதல்: ஆய்வுக்கூட்டத்துக்கு பிறகு, மாலை 3 மணி முதல் 4 மணி வரை பொதுமக்களிடம் ஆளுநர் கோரிக்கை மனுக்களை பெற்றார். விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், குடியிருப்பு சங்கங்கள், மக்கள் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் ஆளுநரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். அவற்றைப் பெற்றுக் கொண்ட ஆளுநர், அவற்றை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
தூய்மை பணி: இதன் தொடர்ச்சியாக மாலையில், திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் ஆளுநர் தூய்மைப் பணிகளை மேற்கொண்டார். பின்னர், பேருந்து நிலையத்தில் இருந்த கழிப்பறைகளை அவர் ஆய்வு செய்தார். மேலும், பேருந்து நிலையத்துக்கு வந்த பயணிகள், கடைகளில் பணிபுரியும் ஊழியர்களிடம் மத்திய அரசின் 'தூய்மை இந்தியா' திட்டம் குறித்த துண்டு பிரசுரங்களையும் ஆளுநர் விநியோகித்தார்.
இதைத்தொடர்ந்து, திருச்சி சந்திப்பு ரயில் நிலையம் அருகே மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள வீடு இல்லாத ஆதரவற்றோருக்கான இரவு தங்கும் இல்லத்தையும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு செய்தார். ஆளுநர் வருகையையொட்டி, திருச்சி மாநகரின் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
சென்னை புறப்பட்டார்: திருச்சியில் ஆய்வுப் பணிகளை முடித்த பின்னர்,புதன்கிழமை மாலை ஆளுநர் சமயபுரம் கோயிலுக்கு செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தப் பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதையடுத்து, மாலை 6 மணிக்கு அவர் விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com