வளர்ச்சியை தீர்மானிப்பது மக்கள்தானே தவிர, மந்திரிகள் அல்ல: பொதுமக்கள் கேள்விக்கு கமல்ஹாசன் பதில்

விதையின் வளர்ச்சியை மண் தீர்மானிப்பதைப் போல எனது அரசியல் வளர்ச்சியை மக்கள் தீர்மானிப்பரே தவிர மந்திரிகள் அல்ல என மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனத் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
வளர்ச்சியை தீர்மானிப்பது மக்கள்தானே தவிர, மந்திரிகள் அல்ல: பொதுமக்கள் கேள்விக்கு கமல்ஹாசன் பதில்

விதையின் வளர்ச்சியை மண் தீர்மானிப்பதைப் போல எனது அரசியல் வளர்ச்சியை மக்கள் தீர்மானிப்பரே தவிர மந்திரிகள் அல்ல என மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனத் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
மதுரை ஒத்தக்கடை அருகே புதன்கிழமை இரவு நடைபெற்ற அக்கட்சியின் தொடக்க நிகழ்ச்சியில் பொதுமக்கள் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள். 
கேள்வி: இவ்வளவு நாளாக எங்கிருந்தீர்கள்?
பதில்: உங்கள் உள்ளங்களில் இருந்தேன். இனிமேல் உங்கள் இல்லங்களில் இருக்க ஆசைப்படுகிறேன். நட்சத்திரமாக இருந்த நான் வீட்டு விளக்காகியுள்ளேன். என்னை ஊழல் போன்ற காற்றிலிருந்து காக்க வேண்டும்.
கேள்வி: உங்களைப் பிடிக்கும். உங்கள் சினிமா, கவிதை, கருத்துகள் பிடிக்கும். உங்கள் அரசியல் இயக்கமும் பிடிக்கும். ஆனால் எத்தனை காலம் தாக்குப்பிடிப்பீர்கள்? உங்களை நம்பி வரலாமா?
பதில்: எனது மூச்சுள்ளவரை தாக்குப்பிடிப்பேன். அதற்குப் பிறகு நீங்கள் தாக்குப் பிடிக்க வேண்டும். அதற்குப் பிறகும் இக்கட்சியை தொடர் ஓட்டம் போல எடுத்துச் செல்ல வேண்டும். கட்சியின் சார்பில் யாரும் நிரந்தர முதல்வராக இருக்க மாட்டார்கள். கட்சி சார்பில் முதல்வர் ஆனவர் உங்களை ஆக்கிரமித்துக்கொள்ளமாட்டார். 
கேள்வி: உங்களுக்கு கஷ்டம் வந்ததாலே தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளீர்களா?
பதில்: விஸ்வரூபம் இரண்டாம் பாகமும் எடுத்துவிட்டேன். மக்களுக்கான கஷ்டத்துக்காகவே தற்போது வந்துள்ளேன். 
கேள்வி: உங்கள் வழிகாட்டி யார்? காந்தியா, காமராஜரா, பெரியாரா, அம்பேத்கரா?
பதில்: நான் பகுத்தறிவு வாதி என்கிறார்கள். அது நிஜம்தான். நீங்கள் எத்தனை சாமியை கும்பிடுகிறீர்கள். அதுபோல எனக்கும் அம்பேத்கர், காந்தியடிகள், நேரு ஆகியோரைப் பிடிக்கும். தற்போது அரசியலில் முன்னுதாரணமாக உள்ள முதல்வர்கள் அரவிந்த் கேஜரிவால், சந்திரபாபு நாயுடு, ஒபாமா, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோரையும் பிடிக்கும். செய்து காட்டியவர்களை விட தற்போது செயல்பாட்டில் சிறந்து விளங்குபவர்களை பிடிக்கும்.
கேள்வி: ஊழலை ஒழிக்க வேண்டும் என்கிறீர்களா? எப்படி ஒழிப்பீர்கள்? 
பதில்: எல்லோரும் செய்த ஊழலை நான் மட்டும் எப்படி ஒழிப்பது? தனியாக முடியுமா? தனி மரம் தோப்பாகாது. எல்லோரும் இணைந்து ஊழலை ஒழிப்போம். தனிப்பட்ட தியாகமும் தேவை. உடல் பயிற்சி செய்வது போல தியாகம் செய்ய முன்வர வேண்டும். ஊழலின்றி நாம் இருந்தால், ஊழலற்ற உலகம் உருவாகும். 
கேள்வி: உங்களுக்கு வாக்களித்து ஒரு வேளை நீங்கள் ஆட்சிக்கு வந்தால், ஆண்களுக்கு குவாட்டரும், பெண்களுக்கு ஸ்கூட்டரும் தரும் திட்டம் நீடிக்குமா? 
பதில்: குவாட்டரும், ஸ்கூட்டரும் நிச்சயமாக தர முடியாது. நீங்கள் மற்றவருக்கு தரும் நிலை ஏற்படுத்தப்படும். ஒரு வள்ளலைச் சுற்றி ஏராளமானோர் பெறும் நிலை மாறி, அனைவரும் வள்ளலாகி உதவும் வகையில் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். 
கேள்வி: பெண்களுக்கு எதிரான வன்முறை நடப்பதற்கு என்ன காரணம்? அதை தடுக்க என்ன வழி?
பதில்: காதல், வீரம் பற்றி மட்டும் பேசினால் போதாது. மகள், சகோதரி என உறவுகளை நினைத்து மனமுருக வேண்டும். சாமியே பெண்களுக்கு சமபாதியை கொடுத்துள்ள நிலையில், பெண்களை சரிசமமாக நினைத்து மதித்தால் பெண்களுக்கு எதிரான செயல் நடக்காது. 
கேள்வி: ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கு நிதி அளித்துள்ளீர்கள்? ஆனால், தமிழகத்தில் தமிழ் செத்துக்கொண்டுள்ளதே?
பதில்: தமிழகத்தில் அனைவரும் சந்தோஷமாக தமிழ் பேசுங்கள் போதும். உங்கள் உரைநடையானது தமிழாக இருந்தால் தமிழ் வளரும். பேச்சில் தமிழை மறந்தால் அது மெல்ல அல்ல உடனே சாகும் நிலை ஏற்படும். ஆரம்ப வகுப்புகளில் இருந்து தமிழை கற்றுக்கொடுக்கவேண்டும். பிற மொழிகளை வெறுக்கக்கூடாது. 
கேள்வி: ராமேசுவரத்துக்கு எதற்காக சென்றீர்கள்? கலாம் வீட்டில் அரசியல் தொடக்கம் எதற்காக?
பதில்: ராமேசுவரம் சென்றதால் கலாம் வீடு செல்லவில்லை. கலாம் வீட்டைப் பார்க்கவே ராமேசுவரம் சென்றேன். எனக்கு பாவ, புண்ணிங்களை விட நியாயம், தர்மத்தில் அதிக நம்பிக்கை உண்டு. ராமேசுவரம் கலாம் பிறந்ததால் புண்ணிய பூமி.
கேள்வி: உங்கள் பிள்ளைகள் அரசியலுக்கு வருவார்களா? 
பதில்: இதோ என் ஆண் பிள்ளைகள் (நற்பணிமன்றத்தினரை கைகாட்டி) அரசியலுக்கு வந்துவிட்டார்கள். இங்குள்ள பெண் பிள்ளைகளும் வந்துவிட்டார்கள். எனது பெண் குழந்தைகள் அரசியலுக்கு வருவதும், வராததும் அவர்கள் விருப்பம். அவர்கள் சுதந்திரத்தில் நான் தலையிடமாட்டேன்.
கமல்ஹாசன் பொதுக்கூட்ட நிகழ்ச்சி சிறப்பு துளிகள்
மதுரை ஒத்தக்கடையில் வேளாண் கல்லூரி எதிரே உள்ள மைதானத்தில் நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சித் தொடக்க விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு சென்னையில் உள்ள சினிமா தொழில்நுட்ப கலைஞர்களை கொண்டு மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடையின் பின்புறம் மற்றும் இருபுறமும் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டிருந்தன.
கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் ரசிகர் மன்ற நிர்வாகிகளோடு தனியார் பாதுகாவலர்களும் ஈடுபட்டிருந்தனர். பெண் பாதுகாவலர்கள் 25 பேருடன் 125 பாதுகாவலர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். கூட்டத்துக்கு வருபவர்கள் அமருவதற்காக 25 ஆயிரம் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன.
மாநாட்டையொட்டி தமிழர்களின் போர்க்கலையான சிலம்பம், வாள் வீச்சு, சுருள் கத்தி வீச்சு, வாள் கேடயம் சண்டை உள்ளிட்ட பல்வேறு வீர விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வென்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டன.
கட்சியில் இணைந்த பிரபலங்கள்: கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் நடிகை ஸ்ரீ பிரியா, நடிகர்கள் வையாபுரி, நாடோடி பரணி, வில்லன் நடிகர் ஆர்.கே.சுரேஷ், திரைப்பட இயக்குநர் சுகா, நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர், கவிஞர் சினேகன், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், முன்னாள் ஏடிஜிபி ஏ.ஜி.மௌர்யா, ஆவணப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் உள்பட பலர் இணைந்தனர். அவர்கள் மேடையில் தொண்டர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டனர். மேலும் அவர்கள் கட்சியின் உயர்மட்டக்குழு உறுப்பினர்களாகவும் அறிவிக்கப்பட்டனர்.
காலில் விழ அனுமதி இல்லை: கமல்ஹாசன் மேடையில் அமர்ந்தபிறகு அவரது காலில் விழவோ, மாலை, சால்வைகள் அணிவிக்கவோ அனுமதி இல்லை. சால்வை வழங்க விரும்புபவர்கள் ஆடைகளாக கொடுத்தால் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு வழங்கப்படும் என்று நிர்வாகிகள் அறிவித்தனர். மேலும் மாநாட்டில் பங்கேற்ற தொண்டர்கள் உடல் தானம் வழங்கும் படிவத்தில் கையெழுத்திடலாம் என்று அறிவிக்கப்பட்டது. நிர்வாகிகள் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று உடல் தானம் வழங்கும் படிவத்தில் கையெழுத்து பெற்றனர்.
20 ஆயிரம் பேர் பங்கேற்பு: மாநாட்டுக்கு 35 பேருந்துகள், 175 வேன்கள், 500 கார்கள், 81 ஆட்டோக்கள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com