தேசியத்தையும், திராவிடத்தையும் புறக்கணிக்கவில்லை: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யத்தில் தேசியத்தையும், திராவிடத்தையும் புறக்கணிக்காமல் கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டிருப்பதாக, அக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
மதுரையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கட்சி நிலை குறித்து விளக்குகிறார் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்.
மதுரையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கட்சி நிலை குறித்து விளக்குகிறார் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்.

மக்கள் நீதி மய்யத்தில் தேசியத்தையும், திராவிடத்தையும் புறக்கணிக்காமல் கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டிருப்பதாக, அக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
மதுரையில் புதன்கிழமை இரவு மக்கள் நீதி மய்யம் புதிய அரசியல் கட்சியை தொடங்கிய கமல்ஹாசன், வியாழக்கிழமை காலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
புதிய கட்சியைத் தொடங்கியிருக்கும் நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைத்தாலும், அழைக்காவிட்டாலும், தொடர்ந்து எங்கள் பணியை மேற்கொள்வோம். எங்களது மக்கள் பணி தொடரும். 
மார்ச் மாதம் மீண்டும் தென் மாவட்டங்களுக்கு வந்து கிராமத் தத்தெடுப்பு உள்ளிட்ட பணிகளைத் தொடரவுள்ளேன். கிராமப் புறங்களில் அவர்களுக்கான தேவையை அறிந்து, சட்டப்பூர்வமாக அதைச் செயல்படுத்த அவர்களுடன் ஒப்பந்தமும் செய்யவுள்ளேன். கிராமப்புற மேம்பாட்டுப் பணிகளுக்கு அரசு ஒத்துழைத்தால் நன்றி தெரிவிப்பேன். ஒத்துழைக்காவிடில், எங்களது பணியைத் தொடருவோம். 
கட்சியில் கீழ் மட்ட அளவில் நிர்வாகிகளை நியமிக்க உள்ளோம். உயர்மட்டக் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் அறிஞர்கள், படித்தவர்கள், சமூக மேம்பாட்டில் ஆர்வமுள்ளவர்கள். அவர்கள் எடுக்கும் முடிவுகள் சரியாகவே இருக்கும். நான் கட்சித் தலைவராக செயல்படுவேன்.
கட்சி தொடக்க விழாவில் கூடிய மக்களே எங்களது எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை கூறிவிட்டார்கள். அந்தக் கூட்டம் திரைப்பட நட்சத்திரத்தைப் பார்க்க கூடிய கூட்டமல்ல. 
மக்கள் நீதி மய்யம் கட்சியில் தேசியத்தையும், திராவிடத்தையும் கொண்டிருக்கிறோம். கிராமமே தேசியம். திராவிடம் என்பது தேசியம் தழுவியது என்பதே எனது பயணம் என்பதால், தேசியத்தையும் இழக்கவில்லை, திராவிடத்தையும் இழக்கவில்லை. 
மக்கள் நீதி மய்யம் வலதுசாரியா, இடதுசாரியா என்று கேட்பவர்களுக்கு நாங்கள் நடுநிலையான மய்யமாக இருக்கிறோம் என்பதை விளக்கும் வகையிலே கட்சியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆட்சியாளர்கள் செய்யத் தவறியதை செயல்படுத்துவதே எங்கள் கொள்கை. நியாயமான தர்மப்படியான காரியத்தைக் கூட ஆட்சியாளர்கள் செய்யாமல், அதை வர்த்தகமாக்கிவிட்டனர். எனவே, அதை நாங்கள் செய்வோம் எனக் கூறுகிறோம்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடியில் உள்ள சிவப்புக் கைகள் உழைப்பையும், வெண்மை நிறக் கைகள் உண்மையையும், கருப்பு நிறமானது திராவிடத்தையும், நடுவில் உள்ள நட்சத்திரத்தின் ஆறு முனைகள் புதுவை உள்ளிட்ட 6 தென் மாநில மக்களையும் குறிக்கும். 
கட்சி தொடக்க விழா ஏற்பாடுகள் தொண்டு நிறுவனத்தின் நடவடிக்கை போல இருப்பது தவறா? அப்படி நீங்கள் பார்த்தால், பாராட்டுகிறீர்களா? என்றார்.
திருச்சியில் ஏப்.4-ல் பொதுக் கூட்டம்
மதுரையைத் தொடர்ந்து திருச்சியில் ஏப்ரல் மாதம் 4-ஆம் தேதி பொதுக் கூட்டம் நடத்தப்படும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். 
சென்னை திரும்பிய அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
காவிரி நீர் தீர்ப்பு குறித்து ஆலோசிக்க தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு வரவில்லை. அதில் என்ன சட்டச் சிக்கல்கள் இருக்கின்றன எனத் தெரியவில்லை. கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தாகி விட்டது. அதற்கான சான்றிதழையும் பெற்று விட்டோம். மீண்டும் மக்களை சந்திக்கும் என் சுற்றுப் பயணம் தொடரும். எங்களது அடுத்த பொதுக் கூட்டம் திருச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஏப்ரல் 4-ஆம் தேதி திட்டமிட்டுள்ளோம். தேர்தல் வரும் போது என்ன நிலைப்பாடு என்பதை நாங்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார் கமல்ஹாசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com