கட்டுமானத் திட்ட அனுமதி 45 நாள்களுக்குள் வழங்க நடவடிக்கை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

கட்டுமானத்துக்கான திட்ட அனுமதி 45 நாள்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறும் வீட்டு வசதி கண்காட்சியை தொடங்கி வைத்து கையேட்டை வெளியிடும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறும் வீட்டு வசதி கண்காட்சியை தொடங்கி வைத்து கையேட்டை வெளியிடும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 

கட்டுமானத்துக்கான திட்ட அனுமதி 45 நாள்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
கிரெடாய் அமைப்பு சார்பில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில். 3 நாள்கள் நடைபெறும் வீட்டுமனை கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியது: தமிழகத்தில் அனைவருக்கும் வீட்டுவசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என்ற நோக்கில், தொலைநோக்குத் திட்டம்-2023-யை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏற்படுத்தினார். இதன்படி, அரசு பல திட்டங்களை வகுத்து, தொடர்ந்து செயலாக்கி வருகிறது.
அவ்வகையில், நகர்புற வளர்ச்சித் துறை மூலம், பல நகரங்களுக்கு முழுமையான அளவில் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. இவற்றின் மீது மக்களின் கருத்துக்கள் விரைவில் பெறப்பட்டு, தேவைப்படும் மாற்றங்களுடன் ஒப்புதல் அளிக்கப்படும். மேலும், உள்ளுர் திட்டக் குழுமங்களின் எல்லைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. இது விரைவாக வளர்ந்து வரும் நகரங்கள் அனைத்திற்கும் பொருந்தும். இதனால், உள்கட்டமைப்புடன் கூடிய நில உபயோக வரையறை செய்யப்பட்ட பகுதி அதிகரிக்கும்.
நில உபயோக வரையறை செய்யப்பட்ட பகுதியில் கட்டுமானத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் தேவைப்படும் நிலங்கள் எளிதாகவும், அடிப்படைக் கட்டமைப்புடன் கிடைக்க இது வழிவகை செய்யும்.
போக்குவரத்து ஒருங்கிணைப்பு மையம்: சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் மூலம் சென்னை மத்திய ரயில் நிலையத்தை ரூ.3.90 கோடி நிதி ஒதுக்கீட்டில் பல்வழி போக்குவரத்து ஒருங்கிணைப்பு மையமாக உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தெருக்களைச் சீர்படுத்துவதற்கும், இணைப்புச் சாலைகள் மற்றும் சாலைகளை அகலப்படுத்தவும் 320 கட்டுமானர்களிடமிருந்து நிலம் பெறப்பட்டுள்ளது. இதில் 256 நிலங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுவிட்டன.
பின்னல்வலைச் சாலைகள்: பல்வேறு போக்குவரத்து வசதிகளை இணைத்து, பயண நேரத்தைக் குறைக்கவும், திறன்மிகு போக்குவரத்து வசதியை ஏற்படுத்தவும் பின்னல்வலைச் சாலைகளை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி ,முதற்கட்டமாக வேகமாக வளர்ந்துவரும் தெற்குப்பகுதி மற்றும் வெளிவட்ட சாலையை ஒட்டியுள்ள 53 கிராமங்களுக்கு பின்னல்வலைச் சாலைகள் ஏற்படுத்தும் திட்ட இறுதிஅறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
பசுமைக் கட்டடங்கள்: பசுமைக் கட்டடங்களை ஊக்குவிக்கும் வகையில், தளப்பரப்பு குறியீடு, சொத்து வரி செலுத்துதல் மற்றும் இதர சலுகைகள் வழங்க ரூ.5 கோடி மதிப்பீட்டில் ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இது நடைமுறைப்படுத்தும் நிலையில் உள்ளது.
உயர்மட்ட சாலை: சென்னை விமானநிலையத்திலிருந்து, செங்கல்பட்டு சுங்கச் சாவடி வரை போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, உயர்மட்டச் சாலை அமைப்பதற்கான சாத்தியக் கூறை ஆய்வுசெய்ய, கலந்தாலோசகர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதன் இறுதித் திட்டஅறிக்கை பெறப்பட்டு அதில் சிலமாற்றங்கள் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. 
திட்ட அனுமதி: கட்டுமானப் பணிகளுக்கான திட்ட அனுமதி வழங்குவதை அரசு எளிதாக்கி வருகிறது. திட்ட அனுமதியையும், கட்டட அனுமதியையும் ஒற்றைச்சாளர முறையில் வழங்கவும், திட்ட அனுமதி விண்ணப்பங்கள் கணினி மூலம் பெறப்பட்டு கூர்ந்தாய்வு செய்யப்பட்டு, 45 நாள்களுக்குள் திட்ட அனுமதி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பொருந்தும்படி திட்ட அனுமதி மற்றும் கட்டிட அனுமதி வழங்க பொது விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த விதிகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றார் ஓ.பன்னீர்செல்வம்.
கண்காட்சியில்: சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் இக்கண்காட்சி வரும் ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெறுகிறது. இக்கண்காட்சியில் 85 கட்டுமான நிறுவனங்களின் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்பு திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் ரூ.20 லட்சம் முதல் ரூ.20 கோடி வரை விலையிலான குடியிருப்பு திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கண்காட்சியில் பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com