சேவை பாதிப்பில் இருந்து மீண்டது ஏர்செல்

கடந்த 3 தினங்களாக ஏர்செல் நிறுவனத்தின் சேவை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை அப்பாதிப்பில் இருந்து மீண்டது.
சேவை பாதிப்பில் இருந்து மீண்டது ஏர்செல்

கடந்த 3 தினங்களாக ஏர்செல் நிறுவனத்தின் சேவை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை அப்பாதிப்பில் இருந்து மீண்டது. இதையடுத்து ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு செல்லிடப்பேசி சேவைகள் கிடைக்கத் தொடங்கின.
ஏர்செல் நிறுவனத்தின் செல்போன் இணைப்புகள் செயல் இழந்ததால் கடந்த 3 நாள்களாக ஏராளமான வாடிக்கையாளர்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் ஏர்செல் அலுவலக கிளைகளை முற்றுகையிட்டனர். பாதிக்கப்பட்ட ஏர்செல் வாடிக்கையாளர்களை தங்கள் நிறுவன சேவைக்கு மாற்றுவதற்கான வாய்ப்பைப் பெற பல நிறுவனங்கள் போட்டி போட்டன.
தொலை தொடர்புத் துறையில் முக்கியப் பங்கு வகிக்கும் ஏர்செல் நிறுவனத்துக்கு நாடு முழுவதும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர். 
ஆனால், டவர் பிரச்னை காரணமாக கடந்த சில நாள்களாக ஏர்செல் இணைப்புகள் செயலிழக்கத் தொடங்கின. பல்வேறு பகுதிகளிலும் கடந்த 3 நாள்களாக ஏர்செல் சேவை முற்றிலும் முடங்கியது.
இதனால், பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் சிரமத்துக்குள்ளாகினர். அவர்கள் ஏர்செல் அலுவலகக் கிளைகளை ஆங்காங்கே முற்றுகையிட்டு சேவை குறைபாட்டுக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்.
ஏர்செல் நிறுவனம் சார்பில் சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டு, இணைப்பைத் துண்டிக்கும் வாடிக்கையாளர்களின் செல்போன் எண்கள் விவரம் பெறப்பட்டு, வேறு நிறுவனத்துக்கு இணைப்பை மாற்றித் தரும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். 
இதற்கிடையில் ஏர்செல் நிறுவனத்தின் சேவை வெள்ளிக்கிழமை முதல் சீரடைந்துள்ளதாக அந்நிறுவனத்தின் தமிழகப் பிரிவு தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன் தெரிவித்தார்.
ஏர்செல்லை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து மீண்டும் ஆன் செய்தால் வழக்கம்போல் தடையற்ற சேவை கிடைக்கும். மேலும் வேறு நிறுவனத்துக்கு மாற விரும்பும் வாடிக்கையாளர்களை நாங்கள் தடுக்கவில்லை. அவர்களின் இணைப்பைத் துண்டித்து, வேறு நிறுவனத்துக்கு மாற உதவுகிறோம். பல்லாயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் இணைப்பைத் துண்டிக்க விரும்புவதால், இந்த நடைமுறையில் சற்று காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com