காவிரி மேலாண்மை வாரியம்: பிரதமரிடம் புதுவை முதல்வர் வலியுறுத்தல் 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடியிடம், புதுவை முதல்வர் வே.நாராயணசாமி வலியுறுத்தினார்.
காவிரி மேலாண்மை வாரியம்: பிரதமரிடம் புதுவை முதல்வர் வலியுறுத்தல் 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடியிடம், புதுவை முதல்வர் வே.நாராயணசாமி வலியுறுத்தினார்.
 புதுச்சேரிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் வே.நாராயணசாமி, அமைச்சர்கள் ஆ.நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான் ஆகியோர் விமான நிலையத்தில் சந்தித்தனர். அப்போது, பிரதமரிடம் 4 கடிதங்களை அளித்தனர். அதன் விவரம் வருமாறு:
 புதுச்சேரி மாநிலத்துக்கு மத்திய அரசு அளிக்க வேண்டிய நிதி மற்றும் தனி கணக்கு ஆரம்பித்த பிறகு மானியமாக அளிக்கப்பட்ட தொகை ரூ.2,300 கோடியை கடனாக மாற்றிச் செலுத்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அது எங்களுக்கு ஏற்புடையது அல்ல. இதை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். இதற்காக இதுவரை ரூ.1,033 கோடியை நாங்கள் வட்டியாகச் செலுத்தியுள்ளோம். அதைத் திரும்பத் தர வேண்டும். 6-ஆவது மற்றும் 7-ஆவது ஊதியக் குழுவின் நிலுவைத் தொகை, மின்சாரத் திட்டத்துக்கான மானியத் தொகை, தானே புயல் பாதிப்புக்கு கிடைக்க வேண்டிய தொகை என ரூ.6,262 கோடியை மத்திய அரசு ஒதுக்கித் தர வேண்டும்.
 காவிரி பிரச்னையில் உச்ச நீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில், கடைமடைப் பகுதியான காரைக்காலுக்கு 7 டிஎம்சி தண்ணீர் கிடைக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு 14.75 டிஎம்சி தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால்தான் தமிழகம், புதுவை, கேரளத்துக்கு முறையாக கர்நாடக அரசு காவிரி நீரைப் பங்கிட்டு கொடுக்க முடியும். எனவே, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 புதுச்சேரியில் உள்ள ஏஎப்டி மில், பாரதி மில், சுதேசி மில் ஆகியவற்றில் நஷ்டம் ஏற்பட்டு, தற்போது நூல் உற்பத்தி தவிர வேறு பணிகள் ஏதும் நடைபெறவில்லை. தொழிலாளர்கள் வேலை இல்லாமல் வெளியே அனுப்பப்பட்டுள்ளனர். இதை புனரமைக்க ரூ.572 கோடியை மத்திய அரசு உடனடியாக அளிக்க வேண்டும். பட்டானூர் நிலத்தை விற்கவும் அனுமதி வழங்க வேண்டும்.
 புதுச்சேரி விமான நிலைய ஓடுதளத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பாக ஏற்கெனவே தமிழக அரசுடன் பேசியுள்ளோம். தமிழக அரசு 202 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்குத் தேவையான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். விமான ஓடுதளம் அமைப்பதன் மூலம் பெரிய விமானங்கள் வெளி நாடுகளில் இருந்து வருவதற்கும், சுற்றுலா வளர்ச்சிக்கும் ஏதுவாக இருக்கும். காரைக்கால்-பேரளம் அகல ரயில் பாதைத் திட்டத்துக்கு தேவையான ரூ.140 கோடியை வழங்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 பின்னர், முதல்வர் நாராயணசாமி கூறுகையில், பிரதமரைச் சந்திக்க முதலில் எங்களுக்கு 10 நிமிடங்கள் மட்டுமே நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. எனினும், 25 நிமிடங்கள் வரை பிரதமர் நேரம் ஒதுக்கிப் பேசினார் என்றார். இதையடுத்து, எதிர்க் கட்சித் தலைவர் என்.ரங்கசாமி பிரதமர் மோடியை சந்தித்தார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com