சமூக பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் 7.5 கோடி மக்கள் பயன் பெறுவர்: துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி

மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ள சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 7.5 கோடி மக்கள் பயன் பெறுவர் என்று துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி கூறினார்
சமூக பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் 7.5 கோடி மக்கள் பயன் பெறுவர்: துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி

மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ள சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 7.5 கோடி மக்கள் பயன் பெறுவர் என்று துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி கூறினார்.
 சென்னையை அடுத்த மேலக்கோட்டையூர் விஐடி நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் மத்திய அரசின் (2018-19) ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை குறித்த விவாத நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் நெறியாளராக பொறுப்பேற்று நடத்திய துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி பேசியது:
 மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்த 1,800 பக்கங்கள் கொண்ட நிதிநிலை அறிக்கையில் நாட்டின் வளர்ச்சிக்கான பல்வேறு பயனுள்ள தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. 2015 - 16, 2016 -17-ஆம் ஆண்டுகளில் அளிக்கப்பட்ட மத்திய நிதி நிலை அறிக்கைகள், காங்கிரஸ் கூட்டணி அரசின் தவறுகளை திருத்தம் செய்வதற்கானவையாக அமைந்தன. 2017-18-ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு மைல் கல்லாக அமைந்தது.
 தற்போது மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி திட்டம் அவசர கதியில் கொண்டு வரப்பட்டதாக ஒரு அதிருப்தி உள்ளது. அடுத்து கணக்கில் வராத சொத்துகளை வரைமுறைப்படுத்துவதில் சரியான கொள்கை முறை இல்லாதது உள்ளிட்ட மத்திய அரசின் 3 கொள்கைகள் மக்களிடையே எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.
 மத்திய அரசின் பட்ஜெட்டில் அறிவித்துள்ள சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 7.5 கோடிமக்கள் பயன் பெறுவர் என்றார் எஸ்.குருமூர்த்தி.
 விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன்: கருத்தரங்கிற்கு தலைமை வகித்து விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் பேசியது:
 இந்தியா பொருளாதாரத்தில் வேகமான வளர்ச்சி அடைந்து வருகின்றது. நமது நாட்டை பொருத்தவரை தனி மனித வருவாய் விகிதம் வளர்ந்த நாடுகளை ஒப்பிடும் போது மிக குறைவாக உள்ளது. 1960-ஆம் ஆண்டில் தென்கொரியா நாட்டில் தனிநபர் வருவாய் 158 டாலர். தற்போது அது 29 ஆயிரம் டாலராக உள்ளது. சீனாவில் 87 டாலராக இருந்த
 தனி நபர் வருமானம் தற்போது 8,400 டாலராக உயர்ந்துள்ளது. நம் நாட்டில் தனி நபர் வருமானம் 81 டாலரில் இருந்து இப்போது 1,850 டாலராக மட்டுமே உயர்ந்துள்ளது. 2035-ஆம் ஆண்டில் நம் நாட்டில் தனிநபர் வருவாய் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக உயர, நாட்டின் உற்பத்தி துறையில் கவனம் செலுத்துவதின் மூலம் சாதிக்க முடியும்.
 நாட்டில் நிலவும் வரி ஏய்ப்பு, கருப்பு பணம் மற்றும் ஊழல் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெறும் தடையாக உள்ளன. நாட்டில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வு வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு அரசியல் மற்றும் தேர்தல் முறையில் சீர்திருத்தம் தேவை என்றார் விஐடி வேந்தர்.
 கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே. ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா,
 தி.மு.க. எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன், அதிமுக எம்.பி. டி.ஜி. வெங்கடேஷ் பாபு, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் சுவர்ண சேதுராமன், பாஜக மாநில குழு உறுப்பினர் நாராயணன் திருப்பதி, இந்தியத் தொழில் கூட்டமைப்பு பிரதிநிதி ஏ.வெங்கட்ராமன் உள்ளிட்டோர் இந்த விவாதத்தில் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com