புதுச்சேரியின் வளர்ச்சிக்கு காங்கிரஸ்தான் தடை: பிரதமர் மோடி கடும் தாக்கு

புதுச்சேரியின் வளர்ச்சி தடைக்கு மத்தியில் ஆண்ட காங்கிரஸ் கட்சியும், யூனியன் பிரதேசத்தில் பெரும்பாலான காலம் ஆளும் கட்சியாக காங்கிரஸ் தொடருவதுமே முக்கிய காரணம் என்று 
பொதுக்கூட்ட மேடையிலிருந்து மக்களைப் பார்த்து கையசைத்த பிரதமர் மோடி. உடன் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,  கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் மகேஷ் கிரி, தேசியச் செயலர் ஹெச்.ராஜா, தமிழ்நாடு பாஜக தலைவர்
பொதுக்கூட்ட மேடையிலிருந்து மக்களைப் பார்த்து கையசைத்த பிரதமர் மோடி. உடன் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் மகேஷ் கிரி, தேசியச் செயலர் ஹெச்.ராஜா, தமிழ்நாடு பாஜக தலைவர்

புதுச்சேரியின் வளர்ச்சி தடைக்கு மத்தியில் ஆண்ட காங்கிரஸ் கட்சியும், யூனியன் பிரதேசத்தில் பெரும்பாலான காலம் ஆளும் கட்சியாக காங்கிரஸ் தொடருவதுமே முக்கிய காரணம் என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாகச் சாடினார்.
 புதிய புதுச்சேரி உருவானால் தான் புதிய இந்தியா உருவாக முடியும். நவீன இந்தியா உருவாக புதுச்சேரி மக்கள் துணை நிற்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
 புதுச்சேரி மாநில பாஜக சார்பில் லாசுப்பேட்டை விமான நிலையம் அருகே உள்ள மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற பிரதமர் மோடி மேலும் பேசியதாவது:
 புதுவையில் ஆட்சியில் இருப்போர் இந்த மண்ணுக்கு அநியாயம் செய்துள்ளனர். புதுவையின் முன்னேற்றத்துக்கு 10 ஆண்டுகளாக தடை போடப்பட்டுள்ளது. இங்கு ஒரு காலத்தில் ஜவுளித் துறை செழித்திருந்தது. தற்போது அந்த மினுமினுப்பை புதுவை இழந்துவிட்டது. கூட்டுறவு இயக்கம் முழுமையாக நசிந்துபோயுள்ளது. நாடு முழுவதும் நவீன மயமாக்கல் நடைபெறும்போது, புதுவையில் போக்குவரத்துத் துறை முழுமையாக நசிந்துள்ளது. உள் கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவதிலும் இங்குள்ள அரசு தோல்வியடைந்துள்ளது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்ததுபோல, புதுவையிலும் தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சியில் இருந்து வருகிறது. புதுவை பின்னடைவைச் சந்தித்தது குறித்து காங்கிரஸ் கட்சிதான் பதிலளிக்க வேண்டும்.
 தில்லியில் இருந்துகொண்டு ஜனநாயகம் பற்றி காங்கிரஸார் பேசுகின்றனர். உள்ளாட்சித் தேர்தலை இங்குள்ள காங்கிரஸ் அரசு ஏன் நடத்தவில்லை? நியமன எம்எல்ஏக்கள் ஜனநாயக முறைப்படி சட்டப் பேரவையில் பணியாற்ற வேண்டும். அவர்களை சட்டப் பேரவைக்குச் சென்று பணி செய்ய அனுமதிக்காததன் காரணம் என்ன?
 புதுவையில் பாரம்பரியக் கட்டடங்கள் உள்ளன. அதைப் பராமரித்து உலகுக்கு காட்டும் வலிமை புதுவைக்கு உண்டு. இதை மனதில் வைத்து புதுச்சேரியை பொலிவுறு நகரங்கள் பட்டியலில் இணைத்துள்ளோம். இதற்காக ரூ.1,800 கோடி செலவு செய்யப்படும். இதன் மூலம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பராமரிக்கப்படும். இதற்காக சிறப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல பிரெஞ்சு அமைப்பு மூலம் குடிநீர் வழங்க ரூ.500 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
 புதுவை ஜிப்மருக்கு ரூ.450 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு ஏற்கெனவே மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கடற்கரை மேம்பாடு மூலம் சுற்றுலா வாய்ப்பை உருவாக்க புதுவைக்கு ரூ. 85 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல, பாரம்பரியக் கடற்கரையை உருவாக்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறை மேம்பாடு மூலம் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
 புதுவை மாநிலம் 11 லட்சம் மக்கள் தொகை கொண்டது. பிரதமரின் முத்ரா கடன் வங்கி திட்டத்தின்கீழ் புதுவையில் கடந்த 3 ஆண்டுகளில் 3.25 லட்சம் பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் ஜன்தன் வங்கிக் கணக்கு திட்டத்தில் 1.5 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். காப்பீட்டுத் திட்டத்தில் 2.5 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
 4 தலைமுறைகளாக ஒரே குடும்ப ஆட்சி: நமது நாட்டை 48 ஆண்டுகளுக்கும் மேலாக 4 தலைமுறைகளாக ஒரே குடும்பத்தினர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆட்சி செய்தனர். (மத்தியில் ஆட்சியில் இருந்த ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி மறைமுகமாக இயக்கிய மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசுகளை சுட்டிக்காட்டிடும் வகையில் அவர் குறிப்பிட்டார்).
 தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு வருகிற மே மாதத்துடன் 48 மாதங்களை நிறைவு செய்கிறது. 48 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும், 48 மாத தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் சாதனைகளையும் அறிவுஜீவிகள் ஒப்பிட்டுப் பார்த்து, இரு அரசுகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் குறித்து விவாதிக்க வேண்டும்.
 பேரவைத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெறும்: புதுவை முதல்வர் நாராயணசாமிக்கு முன்னதாகவே வாழ்த்துக் கூற விரும்புகிறேன். காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற லட்சியத்துடன் பாஜக பயணித்து வருகிறது. ஜுன் மாதத்துக்குப் பிறகு காங்கிரஸ் கட்சிக்கு ஒரே ஒரு முதல்வராக நாராயணசாமி இருப்பார். எங்களின் ஒரே முதல்வர் இவர்தான் என நாடு முழுவதும் காங்கிரஸார் அவரைக் குறிப்பிட்டுப் பேசுவர். கர்நாடகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் விரைவில் நடைபெறவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பாஜக நிச்சயமாக வெற்றி பெறும். அதன்பிறகு புதுச்சேரி தவிர வேறு எந்த மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத நிலை ஏற்படும் என்றார்.
 (பஞ்சாபில் தற்போது அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியில் உள்ளதை கவனத்தில் கொள்ளாமல் பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்).
 கூட்டத்தில் பிரதமர் மோடி ஹிந்தியில் பேசினார். முன்னதாக அவர், தனது உரையை தொடங்கியபோது, "புதுச்சேரி சகோதர, சகோதரிகளே வணக்கம்... உங்களைப் பார்க்க வந்தது ரொம்ப சந்தோஷம். புதுச்சேரி ஒரு அழகான ஊர்' என்று தமிழில் கூறினார்.
 இந்தக் கூட்டதில் மத்திய கப்பல் மற்றும் நிதித் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், புதுவை மாநில பாஜக மேலிடப் பொறுப்பாளர் மகேஷ் கிரி எம்பி, கட்சியின் தேசியச் செயலர் ஹெச்.ராஜா, மாநிலத் தலைவர்கள் தமிழிசை செüந்தரராஜன் (தமிழ்நாடு), வி.சாமிநாதன் (புதுவை), முன்னாள் தலைவர் எஸ்.பி.கே.தாமோதரன், மாநில துணைத் தலைவர் ஏம்பலம் ஆர்.செல்வம், நியமன எம்எல்ஏக்கள் சங்கர், செல்வகணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 புதுவை முதல்வர் கண்டனம்
 புதுச்சேரி பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை விமர்சித்ததற்கு புதுவை முதல்வர் வே.நாராயணசாமி கடும் கண்டனம் தெரிவித்தார்.
 இதுகுறித்து புதுச்சேரியில் தனது இல்லத்தில் அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை மாலை கூறியதாவது: வரும் ஜுன் மாதத்துக்குப் பிறகு இந்தியாவில் காங்கிரஸ் கட்சியில் நாராயணசாமி மட்டும்தான் முதல்வராக இருப்பார் என்றும், இவர் மட்டுமே எங்களது ஒரே முதல்வர் என தோளில் தூக்கிக்கொண்டு நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் செல்வார்கள் என்றும் பிரதமர் பேசியுள்ளார். உயர் பதவியில் உள்ள பிரதமரின் இதுபோன்ற கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதது.
 எந்தக் கட்சிக்கும் வெற்றி, தோல்வி என்பது இயல்பானதே. பல மாநிலங்களில் ஆட்சியில் இருந்த பாஜக தோல்வியடைந்து மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. வரும் சட்டப் பேரவைத் தேர்தல்களில் கர்நாடகம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் என பல மாநிலங்களில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும்.
 பிரதமர் கூறியதுபோல புதுவையில் நியமன எம்எல்ஏக்கள் சட்டப் பேரவையில் பணியாற்றுவதை நாங்கள் தடுக்கவில்லை. இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதேபோல, புதுவையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாதது குறித்து பிரதமருக்கு இங்குள்ளவர்கள் தவறான தகவலைத் தெரிவித்துள்ளனர் என்றார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com