சிதம்பரம் கோயிலில் துண்டுப் பிரசுரம் வைத்து வழிபட முயற்சி: 8 பேர் கைது

தமிழக விவசாயிகளுக்கு உதவும் எண்ணம் பிரதமர் மோடிக்கு உருவாக வேண்டும் என்ற வாசகம் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வைத்து, சிதம்பரம் நடராஜர் கோயிலில் வழிபட முயன்ற தென்னிந்திய நதிகள்

தமிழக விவசாயிகளுக்கு உதவும் எண்ணம் பிரதமர் மோடிக்கு உருவாக வேண்டும் என்ற வாசகம் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வைத்து, சிதம்பரம் நடராஜர் கோயிலில் வழிபட முயன்ற தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பி.அய்யாக்கண்ணு உள்ளிட்ட 8 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிலையில், பி.அய்யாக்கண்ணு தலைமையில், வீராணம் ஏரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் ரங்கநாயகி உள்ளிட்ட விவசாயிகள், சிதம்பரம் நடராஜர் கோயிலில் கோரிக்கைகள் அடங்கிய துண்டுப் பிரசுரத்தை வைத்து வழிபட புறப்பட்டனர். அந்தப் பிரசுரத்தில், 'தமிழக விவசாயிகளுக்கு உதவும் எண்ணம் பிரதமர் மோடிக்கு உருவாக வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன. இதற்காக, அவர்கள் வடக்கு கோபுர வாயில் வழியாக கோயிலுக்குள் செல்ல முயன்றனர். தகவல் அறிந்த சிதம்பரம் ஏஎஸ்பி என்.எஸ்.நிஷா மற்றும் போலீஸார் அவர்களை வடக்கு ரத வீதியில் தில்லைக்காளியம்மன் கோயில் நுழைவுவாயில் அருகே தடுத்து நிறுத்தி பி.அய்யாக்கண்ணு உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர்.
முன்னதாக பி.அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளை காப்பாற்றுவதாகக் கூறுகின்றனவே தவிர எதுவும் செய்யவில்லை. தேர்தலுக்கு முன்பாக மோடி கூறியதுபோல விவசாய உற்பத்தியை இரு மடங்காக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் பிரதமர் அதைச் செயல்படுத்தவில்லை. முல்லைப் பெரியாறு அணையின் நீர்த் தேக்க அளவை 152 அடிவரை உயர்த்த வேண்டும் என நீதிமன்றம் கூறியும் அமல்படுத்தவில்லை. தமிழக விவசாயிகளுக்கு அவர் எதுவும் செய்யவில்லை. தமிழக மக்களுக்கு நல்லது செய்யும் எண்ணம் பிரதமருக்கு இல்லை. ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களைச் செயல்படுத்தி விவசாயத்தை அழிக்க நினைக்கிறார். கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாட்டில் உள்ள 294 ஒன்றியங்களில் 100 நாள் நடைபயணம் மேற்கொள்ள உள்ளோம். 
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கியுள்ளதை வரவேற்கிறோம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com