தருமபுரி அருகே காதல் விவகார தகராறில் மேலும் மூவர் கைது: 3-ஆவது நாளாக 350 போலீஸார் குவிப்பு

தருமபுரி அருகே நல்லம்பள்ளியில் காதல் விவகாரத்தில் நிகழ்ந்த தகராறு தொடர்பாக,  மேலும், மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தருமபுரி அருகே காதல் விவகார தகராறில் மேலும் மூவர் கைது: 3-ஆவது நாளாக 350 போலீஸார் குவிப்பு

தருமபுரி அருகே நல்லம்பள்ளியில் காதல் விவகாரத்தில் நிகழ்ந்த தகராறு தொடர்பாக,  மேலும், மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நல்லம்பள்ளியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மணி.  இவரது, மகன் கைப்பந்து விளையாட்டு வீரர் ராஜ்குமார் (24).  அதே பகுதியைச் சேர்ந்தவர் ஜகதீசன்.  முன்னாள் ராணுவ வீரரான இவரது மகள் பிரியங்கா(21).  இவர், திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.   வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த ராஜ்குமார் மற்றும் பிரியங்கா ஆகிய இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.  

இந்த நிலையில்,  கடந்த சனிக்கிழமை கல்லூரியிலிருந்து ஊருக்குத் திரும்புவதாகக் கூறிவிட்டு வந்த பிரியங்கா, வீட்டுக்கு வரவில்லையாம்.  இதே போல,  ராஜ்குமாரும் அந்தப் பகுதியில் இல்லையாம்.  இதனால், ராஜ்குமார் தனது மகளைக் கடத்திச் சென்றுவிட்டதாக பிரியங்காவின் பெற்றோர் அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  இதன் பேரில்,  போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராஜ்குமாரைத் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில்,  இவ் விவகாரம் தொடர்பாக நல்லம்பள்ளியில் இரு தரப்பினரிடையே ஞாயிற்றுக்கிழமை கைகலப்பு ஏற்பட்டது.  மேலும்,  இந்த தகராறைத் தொடர்ந்து, ஒரு தரப்பினர் பெட்ரோல் குண்டுகள் தயாரித்ததாக போலீஸார் திங்கள்கிழமை மூவரை கைது செய்தனர்.  மேலும்,  இதில் தொடர்புடைய கமலக் கண்ணன் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து,  ஒரு தரப்பினரைத் தாக்கியதாக அளித்த புகாரின் பேரில், பிரியங்காவின் சகோதரர் விஜய் விஸ்வநாத்(23),  அவரது உறவினர்கள் அரவிந்த்(23)  மற்றும் செம்புலி என்கிற ரவிக்குமார்(24) ஆகிய மூவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.  இதுவரை இவ் விவகாரத்தில் இரு தரப்பையும் சேர்ந்த 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.  மேலும், கடத்தல் வழக்கு தொடர்பாக தனிப்படை அமைத்து ராஜ்குமார், பிரியங்காவைத் தேடி வருகின்றனர்.

மேலும்,  நல்லம்பள்ளியில் பதற்றம் தொடர்ந்து நீடிப்பதால்,  தருமபுரி, கிருஷ்ணகிரி,  சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில்,  ஆறு துணைக் காவல் கண்காணிப்பாளர்கள்,  14 காவல் ஆய்வாளர்கள் என மொத்தம் 350-க்கும் மேற்பட்ட போலீஸார் 31 மையங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  

மேலும்,  தீயணைப்பு வாகனம்,  வஜ்ரா உள்ளிட்ட கலவர காலங்களில் பயன்படுத்தும் வாகனங்களும் அங்கு தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.  மேலும்,  நல்லம்பள்ளி பகுதியில் பதற்றத்தைத் தணித்து, இயல்பு நிலைக்குக் கொண்டு வர,  வருவாய்த் துறையினர்,  காவல் துறையினருடன் இரு தரப்பினரையும் அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com