எம்.எஸ்.சுப்புலட்சுமியின் மகள் ராதா விஸ்வநாதன் மறைவு

கர்நாடக சங்கீத இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் மகளும், வாய்ப்பாட்டுக் கலைஞருமான ராதா விஸ்வநாதன் (83) உடல்நலக் குறைவால் காலமானார்.
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் மகள் ராதா விஸ்வநாதன் மறைவு

கர்நாடக சங்கீத இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் மகளும், வாய்ப்பாட்டுக் கலைஞருமான ராதா விஸ்வநாதன் (83) உடல்நலக் குறைவால் காலமானார்.
உலகப் புகழ் பெற்ற கர்நாடக சங்கீத இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் மகளும், அவரது இசைப் பயணத்தில் 50 ஆண்டுகால இசை மேடைகளைப் பகிர்ந்து கொண்டிருந்தவருமான ராதா விஸ்வநாதன் செவ்வாய்க்கிழமை (ஜன.2) நள்ளிரவு 11.50 மணி அளவில் பெங்களூரில் காலமானார்.
கடந்த இரண்டு மாதங்களாக நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ராதா விஸ்வநாதன், தனது மகன் சீனிவாசனுடன் வசிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே சென்னையில் இருந்து பெங்களூரில் குடியேறியிருந்தார்.
ராதா விஸ்வநாதனின் உடல் குடும்ப வழக்கப்படி புதன்கிழமை மாலை 3 மணி அளவில் தகனம் செய்யப்பட்டது. இதில் அவரது குடும்ப உறுப்பினர்கள், இசைக் கலைஞர்கள், இசை ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர். ராதா விஸ்வநாதனுக்கு வி.சந்திரசேகர், வி.சீனிவாசன் ஆகிய மகன்கள், லட்சுமி என்ற மகள் உள்ளனர்.
தனது தாய் ராதா விஸ்வநாதன் குறித்து மகன் சீனிவாசன் கூறியது: கடந்த இரண்டு மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தாலும், எனது தாய் மனரீதியாக துடிப்போடு இருந்தார். பஜனையின் நாதம் ஒலித்துக்கொண்டிருந்தபோது அவர் உயிர் பிரிந்ததை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. தனது இறுதித் தருணத்தில் எனது மகள் ஐஸ்வர்யாவை எஸ்.எம்.சுப்புலட்சுமியின் பிரபலமான 'ஸ்ரீமன் நாராயண' என்ற பாடலைப் பாடும்படி கேட்டுக் கொண்டார். சரணத்தில் 'ஸ்ரீபாதமே சரணு' என்று பாடிக் கொண்டிருந்தபோது, எனது தாய் எங்களைவிட்டு நிரந்தரமாக பிரிந்து, இறைவனிடம் தஞ்சமடைந்துவிட்டார். எனது மகள் ஐஸ்வர்யாவுக்கு 700 கீர்த்தனைகளைச் சொல்லிக் கொடுத்த எனது தாய், எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாரம்பரியத்தைத் தொடருமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.
ஒருமுறை பெங்களூரில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ராதா விஸ்வநாதன், 'என் அம்மா எம்.எஸ்.சுப்புலட்சுமிதான் எனது உலகமே. இசையில் மட்டுமல்லாமல், எனது வாழ்க்கையிலும் ஒளிவிளக்கை ஏற்றியவர் அம்மா ' என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வாழ்க்கைக் குறிப்பு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் 1934-ஆம் ஆண்டு டிச.11-ஆம் தேதி பிறந்த ராதா விஸ்வநாதன், சிறந்த பரதநாட்டியக் கலைஞராக விளங்கி வந்தார். அதேபோல, கர்நாடக சங்கீத வாய்ப்பாட்டிலும் சிறந்து விளங்கினார். தனது தாய் எம்.எஸ்.சுப்புலட்சுமியுடன் இசைக் கச்சேரிகளில் வாய்ப்பாட்டு பாடத் தொடங்கியதால், பரத நாட்டியத்தை ஒதுக்கிவைத்து விட்டிருந்தார். டி.ஆர்.பாலசுப்ரமணியம், ராமநாதபுரம் கிருஷ்ணன், மாயவரம் கிருஷ்ண ஐயர் ஆகியோரிடம் கர்நாடக இசையைக் கற்றுத் தேர்ந்த ராதா விஸ்வநாதன், 5 வயது முதலே எம்.எஸ்.சுப்புலட்சுமியுடன் இசை மேடைகளில் தென்படத் தொடங்கினார். வழுவூர் ராமையா பிள்ளையிடம் பரதநாட்டியம் கற்றப் பிறகு, 1945-ஆம் ஆண்டு அரங்கேற்றம் நடைபெற்றது. பின்னர், புது தில்லியில் பிர்லா இல்லத்தில் மகாத்மா காந்தி முன் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய மீரா பஜனுக்கு ராதா நடனமாடினார். தனது 21-ஆவது வயதில் நடனத்தை முழுமையாகத் துறந்த ராதா, அதன்பிறகு முழு நேரமும் வாய்ப்பாட்டில் கவனம் செலுத்தினார். 
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கச்சேரிகளில் முக்கியமான உறுப்பினராகத் திகழ்ந்த ராதா, முசிறி சுப்ரமணிய ஐயர், செம்மங்குடி சீனிவாச ஐயர், கே.வி.நாராயணசாமி ஆகியோரிடம் கீர்த்தனைகளை கற்று சிறந்தார். 6 வயதில் ராதா, 'சகுந்தலை' திரைப்படத்தில் அறிமுகமாகி பரதனாக நடித்தார். பின்னர், தமிழ் மற்றும் ஹிந்தியில் உருவான 'மீரா' திரைப்படத்தில் குழந்தை மீராவாகவும் நடித்திருந்தார். எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு ராதா விஸ்வநாதன் சீடராகவும் விளங்கினார். எம்.எஸ்.சுப்புலட்சுமியுடன் இணைந்து அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, பிலிப்பின்ஸ் உள்ளிட்ட நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து இசை கச்சேரிகளை நடத்தியுள்ளார். 1966-ஆம் ஆண்டு ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோதுதான் அக்.24-ஆம் தேதி ஐ.நா. மன்றத்தில் அதன் தொடக்கநாள் விழாவில் எம்.எஸ்.சுப்புலட்சுமியும் ராதா விஸ்வநாதனும் இசைக் கச்சேரி நடத்தினர். தனது வாழ்க்கையையே கர்நாடக இசைக்காக அர்ப்பணித்திருந்த ராதா விஸ்வநாதனுக்கு 'சங்கீத ரத்னா', 'கலா சந்திரிகா' உள்ளிட்ட ஏராளமான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com