புதுவை அரசின் சட்டரீதியிலான நடவடிக்கைகளுக்கு ஆதரவு உண்டு: கிரண் பேடி

புதுவை அரசின் சட்டரீதியிலான நடவடிக்கைகளுக்கு தனது ஆதரவு எப்போதும் உண்டு என துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார். முதல்வர் நாராயணசாமி தலைமையிலான
புதுவை அரசின் சட்டரீதியிலான நடவடிக்கைகளுக்கு ஆதரவு உண்டு: கிரண் பேடி

புதுவை அரசின் சட்டரீதியிலான நடவடிக்கைகளுக்கு தனது ஆதரவு எப்போதும் உண்டு என துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார். முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கும், ஆளுநர் கிரண் பேடிக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது.
இந்த நிலையில், முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர், அமைச்சர் நமச்சிவாயம் தலைமையிலான குழுவினர் ஆளுநர் கிரண் பேடியை வெள்ளிக்கிழமை மாலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், அமைச்சர் நமச்சிவாயம் 'ஆளுநருடனான சந்திப்பு திருப்தி அளிக்கிறது' என்று கூறினார்.
இந்தச் சந்திப்பு குறித்து துணைநிலை ஆளுநர் கிரண் பேடி கட்செவி அஞ்சலில் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி: இரு அமைச்சர்களும், இரு சட்டப்பேரவை உறுப்பினர்களும் வெள்ளிக்கிழமை ஆளுநர் மாளிகைக்கு வந்து பிரச்னைகள் குறித்து விவாதித்தனர். அரசு சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய கொள்முதல் பணிகள் குறித்து வலியுறுத்தினர்.
அதிகாரிகள் ஓய்வு பெற்றுச் சென்றுவிட்டாலும், அவர்களது பணியின்போது செய்த தவறுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். எனவே, அவசரத் தேவை உள்ளிட்ட அனைத்து கொள்முதல்களுக்கும் முறையான செயல்முறைகளை நிறைவு செய்ய வேண்டும்.
அதிகாரிகள் ஓய்வு பெற்றுச் செல்லலாம். ஆனால்,கோப்புகள் அங்கேயே இருக்கும். அவர்கள் எவ்வாறு செயல்பட்டார்கள் என்பதையும் தெரிவிக்கும். ஆனால், தவறுகளுக்கு ஆளுநர் மாளிகை விதிவிலக்குகளை அளிக்கவில்லை. எனவே, எதைக் கொள்முதல் செய்வதாக இருந்தாலும் திட்டமிட்டு, நிதிப் பயன்பாட்டு விதிகளைப் பின்பற்றி, தகுந்த அதிகாரிகளின் அங்கீகாரத்தையும் பெற வேண்டும். இதற்கு எந்த விதிவிலக்கும் இல்லை.
நிதி இல்லாமல், விதிகளைப் பின்பற்றாமல் கொள்முதல் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட கோப்புகளைத் திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், கொள்முதல் செய்ய காலதாமதமாகும். மேலும், தணிக்கை நடவடிக்கைக்கும் வழிவகுக்கும் என அவர்களிடம் திட்டவட்டமாக தெரிவித்தேன்.
புதுவையில் உள்ள நிர்வாகம், சமுதாயத்தில் பின்தங்கிய பிரிவினர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும், அமைச்சர்களும், சட்டப்பேரவை உறுப்பினர்களும் இதைப் பின்பற்றுவதாகவும் அவர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து, நானும் சட்டத்தின் அடிப்படையிலான புதுவை அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதாக உறுதியளித்தேன் என்று ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com