மாநிலம் முழுவதும் 12 ஆயிரம் பேருந்துகள் இயக்கம்

தமிழகத்தில் சனிக்கிழமை 12 ஆயிரத்து 124 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. 
மாநிலம் முழுவதும் 12 ஆயிரம் பேருந்துகள் இயக்கம்

தமிழகத்தில் சனிக்கிழமை 12 ஆயிரத்து 124 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. 
தமிழகத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் கடந்த 3 நாள்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, சென்னையைத் தவிர்த்து அனைத்து நகரங்களிலும் தனியார் பேருந்துகள் ஆக்கிரமித்துள்ளன. பெரும்பாலான தனியார் பேருந்துகளில் வழக்கமான கட்டணங்கள் வசூலிக்கப்பட்டாலும், சில பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கையைப் பொருத்து கூடுதலாக கட்டணம் பெறப்படுகிறது. ஆனாலும், இதனை பொருட்படுத்தாமல் பொது மக்கள் தனியார் பேருந்துகளில் பயணித்து வருகின்றனர்.
அரசு பேருந்துகளில் உயர்வு: குறைந்த அளவு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டாலும், அவற்றிலும் கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரத்துக்கு தனியார் பேருந்துகளில் சனிக்கிழமையன்று ரூ.20 கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால், அரசு பேருந்துகளில் ரூ.23 முதல் ரூ.25 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது.
பயணிகள் அச்சம்: அரசுப் பேருந்துகளில் பெரும்பாலானவை மாற்றுப் பணியாளர்களைக் கொண்டே இயக்கப்படுகின்றன. அவர்கள் சீருடையின்றியும் பணியாற்றி வருகின்றனர். இதனால், மாற்றுப் பணியாளர்களைக் கொண்டு இயக்கப்படும் பேருந்துகளில் பயணிக்க பொது மக்கள் தயங்கி வருகின்றனர். 
தமிழகத்தில் ஓரளவு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், அவற்றில் ஏறுவதற்குப் பதிலாக தனியார் பேருந்துகளிலேயே மக்கள் பயணம் செய்தனர். சென்னையிலும் மாநகர பேருந்துகள் முழுமையாக இயக்கப்படாத காரணத்தால், ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்களில் மக்கள் அதிகளவு பயணித்தனர். தனிநபர் மற்றும் ஆட்டோக்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டதால், சென்னை நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 
எவ்வளவு பேருந்துகள் இயக்கம்: தமிழகம் முழுவதும் 66.49 சதவீதப் பேருந்துகள் சனிக்கிழமை இயக்கப்பட்டதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. மாநிலத்தில் உள்ள 8 போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 12 ஆயிரத்து 124 பேருந்துகள் சனிக்கிழமை இயக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது. சென்னையில் மொத்தம் உள்ள 3 ஆயிரத்து 150 பேருந்துகளில் ஆயிரத்து 40 பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டன. இது 33.02 சதவீதம் ஆகும் என அரசு கூறியுள்ளது. 
இதேபோன்று, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் அனைத்து மாவட்டங்களுக்கும் வழக்கமாக இயக்கப்படும் 424 பேருந்துகளில் 360 பேருந்துகள் இயக்கப்பட்டன. 
இது 84.91 சதவீதம் ஆகும் எனவும், இதர கோட்டங்களில் 50 முதல் 80 சதவீதம் அளவுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. 
தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்துக்கழங்கள் மூலம் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து சேவைகள் தடையின்றி இயக்கப்பட்டதாக மாநில போக்குவரத்துத் துறையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com