பொங்கல் சிறப்புப் பேருந்துகளுக்கு 75 ஆயிரம் பேர் முன்பதிவு: அறிவிக்கப்பட்டபடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

பொங்கல் சிறப்புப் பேருந்துகளில் பயணம் செய்ய மாநிலம் முழுவதும் இதுவரை ஆன்-லைன் மூலம் சுமார் 75 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருப்பதாகவும், அரசு ஏற்கெனவே அறிவித்தவாறு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்ப
A.S.கணேஷ்
A.S.கணேஷ்

பொங்கல் சிறப்புப் பேருந்துகளில் பயணம் செய்ய மாநிலம் முழுவதும் இதுவரை ஆன்-லைன் மூலம் சுமார் 75 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருப்பதாகவும், அரசு ஏற்கெனவே அறிவித்தவாறு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறினர். 
பொங்கல் பண்டிகையையொட்டி, பொதுமக்களின் வசதிக்காக சென்னையிலிருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஜனவரி 11 -ஆம் தேதி முதல் ஜனவரி 13 -ஆம் தேதி வரை 5,158 சிறப்புப் பேருந்துகள் உள்பட மொத்தம் 11,983 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் கடந்த 9 -ஆம் தேதி தெரிவித்தார்.
கவுன்ட்டர்கள் திறக்கப்படவில்லை: இந்தச் சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு கவுண்ட்டர்கள் செவ்வாய்க்கிழமை (ஜன.9) திறக்கப்படும் எனவும் அவர் அறிவித்திருந்தார். ஆனால் போக்குவரத்துத் தொழிலாளர்கள் மேற்கொண்டு வரும் வேலை நிறுத்தப் போராட்டத்தால் இந்த சிறப்புக் கவுண்டர்கள் திறக்கப்படவில்லை என போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள் கூறினர்.
இதுதொடர்பாக அவர்கள் மேலும் கூறியது:
ஆன்-லைனில் பதிவு: 300 கி.மீ. தூரத்துக்கு மேல் செல்லும் சிறப்புப் பேருந்துகளில் பயணிக்க விரும்புவோர் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ற்ஸ்ரீ.ண்ய்) என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். 
அதனடிப்படையில் பொங்கல் சிறப்புப் பேருந்துகளில் ஜனவரி 11, 12, 13 ஆகிய தேதிகளில் பயணம் செய்ய மாநிலம் முழுவதிலும் இருந்து சுமார் 75,000 பேர் ஆன்-லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளனர்.
மேலும் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக இந்தப் பேருந்துகள் இயக்கப்படுமா என்ற குழப்பம் பொதுமக்களிடையே இருப்பதாக செய்திகள் வருகின்றன. அறிவிக்கப்பட்டவாறு பொங்கல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். 
அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com