ஒப்பந்த செவிலியர்கள் ஊதிய விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ஒப்பந்த செவிலியர்கள் ஊதிய விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி 6 மாத காலத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒப்பந்த செவிலியர்கள் ஊதிய விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி 6 மாத காலத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊதிய உயர்வு, பணிநிரந்தரம் உள்ளிட்ட செவிலியர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அரசுக்கு உயர்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது ஒப்பந்த செவிலியர்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், வழக்கு மீண்டும் தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட செவிலியர்களுக்கான மாத ஊதியத்தை ரூ.7 ஆயிரத்திலிருந்து ரூ.14 ஆயிரமாக உயர்த்த தமிழக அரசு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. மேலும் கடந்த 6 ஆண்டுகளில், 6 ஆயிரத்து 600 பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
அப்போது செவிலியர் சங்கங்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் மற்றும் வழக்குரைஞர் புகழ்காந்தி ஆகியோர், செவிலியர்கள் தரப்பு ஊதியத்தை ரூ.22 ஆயிரமாக உயர்த்த மருத்துவப் பணிகள் இயக்குனரே கடந்த நவம்பர் மாதம் அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளார். எனவே, தற்போதைய பேச்சுவார்த்தையில் சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஒப்பந்த செவிலியர்களுக்கான மாத ஊதியத்தை ரூ.22 ஆயிரமாக வழங்க பரிசீலிக்க வேண்டும். ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக அரசு நியமித்துள்ள குழு செவிலியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி 2 மாத காலத்துக்குள் முடிவெடுத்து அறிக்கைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com