ஒக்கி புயலில் மாயமான மீனவர்களின் இறுதி நிலவரம் என்ன?: மீனவ கிராமங்களில் மீன்வள இயக்குநர் ஆய்வு

ஒக்கி புயலில் சிக்கி காணாமல்போன மீனவர்களின் இறுதி நிலவரம் குறித்து அறிய, குமரி மீனவ கிராமங்களில் மீன்வளத் துறை இயக்குநர் வி.பி. தண்டபாணி, மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங்

ஒக்கி புயலில் சிக்கி காணாமல்போன மீனவர்களின் இறுதி நிலவரம் குறித்து அறிய, குமரி மீனவ கிராமங்களில் மீன்வளத் துறை இயக்குநர் வி.பி. தண்டபாணி, மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் ஆகியோர் செவ்வாய்க்கிழமை கள ஆய்வு மேற்கொண்டனர்.
ஒக்கி புயலில் சிக்கி குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், விளவங்கோடு வட்டத்துக்கு உள்பட்ட நீரோடியைச் சேர்ந்த 33 பேர், மார்த்தாண்டன்துறையைச் சேர்ந்த 4 பேர், வள்ளவிளையைச் சேர்ந்த 35 பேர், இரவிபுத்தன்துறையைச் சேர்ந்த 4 பேர், சின்னத்துறையைச் சேர்ந்த 34 பேர், தூத்தூரைச் சேர்ந்த 9 பேர், பூத்துறையைச் சேர்ந்த 16 பேர், இரயுமன்துறையைச் சேர்ந்த 2 பேர், நித்திரவிளையைச் சேர்ந்த 2 பேர், முள்ளூர்துறையைச் சேர்ந்த 2 பேர், மேல்மிடாலம் பகுதியைச் சேர்ந்த 3 பேர் என விளவங்கோடு வட்டத்தைச் சேர்ந்த 144 மீனவர்களும், கல்குளம் வட்டம் வாணியகுடியைச் சேர்ந்த ஒருவர், குளச்சலை சேர்ந்த இருவர் , தோவாளை வட்டம் பூதப்பாண்டி, மேல மணக்குடி பகுதிகளைச் சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 149 மீனவர்கள் மாயமாகியுள்ளனர்.
இம்மீனவர்கள் குறித்த முழுமையான தகவல்களைத் திரட்டும்பொருட்டு வட்டாட்சியர்கள் தலைமையிலான 5 கிராம குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக் குழுவினர் முழுமையாக நடத்திய விசாரணை தொடர்பான அறிக்கை, மாவட்ட ஆட்சியரிடம் தாக்கல் செய்யப்பட உள்ளது. பின்னர், காணாமல்போன மீனவர்கள் குறித்த இறுதிப் பட்டியலில், அவர்கள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், மீன்வளத் துறை இயக்குநர் வி.பி.தண்டபாணி, ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் ஆகியோர் கொல்லங்கோடு அருகேயுள்ள நீரோடி மீனவ கிராமத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர். அங்குள்ள பங்குத் தந்தை லூசியான் தோமஸை சந்தித்து கருத்து கேட்டனர். தொடர்ந்து, வள்ளவிளை மீனவ கிராமத்தில் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பத்தினரை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தனர்.
பின்னர், மீன்வளத்துறை இயக்குநர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒக்கி புயலில் சிக்கி காணாமல்போன குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு அரசு கருணைத் தொகை வழங்குவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இம் மாவட்டத்தைச் சேர்ந்த மாயமான 149 மீனவர்களின் குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆவணங்களைப் பெற்று கருத்துரு சரிபார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து இதுகுறித்த விவரங்கள் மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டு 15 நாள்களில் கருணைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், தகுதியான குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்றார் அவர்.
இதைத் தொடர்ந்து, அவர்கள் சின்னத்துறை உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களுக்குச் சென்றனர். விளவங்கோடு வட்டாட்சியர் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகளும் உடன் சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com