ஜல்லிக்கட்டின் பாரம்பரியத்தைக் காப்பதில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

ஜல்லிக்கட்டின் பாரம்பரியத்தைக் காப்பதில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி. உடன் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள்.
ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி. உடன் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள்.

ஜல்லிக்கட்டின் பாரம்பரியத்தைக் காப்பதில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. போட்டிக்கு முன்னதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதையடுத்து முதல்வரும், துணை முதல்வரும் கோயில் காளைகளை அவிழ்த்துவிட்டு மரியாதை செலுத்தி ஜல்லிக்கட்டைத் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது: மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு ஆகிய பகுதிகளைத் தொடர்ந்து அலங்காநல்லூரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. போட்டிகளுக்கான ஏற்பாடுகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளன. பாரம்பரியமான இந்த வீர விளையாட்டில் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் போட்டியை நேரில் பார்க்கும்போது தான் காளைகள் போட்டியின்போது துன்புறுத்தப்படுவதில்லை என்பது தெரிகிறது. காளைகளை அதன் உரிமையாளர்கள் குழந்தைகளைப் போல வளர்க்கின்றனர். சிறிது துன்புறுத்தலும் இல்லாமல் மாடுபிடி வீரர்களும் காளைகளை அணைகின்றனர். பாரம்பரியமான இந்த வீர விளையாட்டை பாதுகாப்பதில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும் என்றார்.
இதைத்தொடர்ந்து துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, பல கட்ட சட்டப் போராட்டங்கள் மூலம் மீட்கப்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஆட்சி நடந்தபோதே சட்டரீதியான போராட்டங்களை நடத்தி ஜல்லிக்கட்டுக்கான உரிமைகளை மீட்க முயன்றோம். ஆயிரம் ஆண்டு வரலாறுடைய ஜல்லிக்கட்டு போட்டியின் பாரம்பரியத்தை காப்பது நம் அனைவரது கடமை என்றார்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.கே.போஸ், சரவணன், வி.வி.ராஜன் செல்லப்பா, மாணிக்கம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com