தமிழக மக்களின் கலாசாரம், பாரம்பரியம் வியப்பளிக்கிறது: ஜல்லிக்கட்டு பற்றி வெளி நாட்டினர் கருத்து

தமிழக மக்களின் கலாசாரம் மற்றும் பாரம்பரியம் வியப்பளிப்பதாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண வந்த வெளிநாட்டினர் தெரிவித்தனர்.
தமிழக மக்களின் கலாசாரம், பாரம்பரியம் வியப்பளிக்கிறது: ஜல்லிக்கட்டு பற்றி வெளி நாட்டினர் கருத்து

தமிழக மக்களின் கலாசாரம் மற்றும் பாரம்பரியம் வியப்பளிப்பதாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண வந்த வெளிநாட்டினர் தெரிவித்தனர்.

உலகப் புகழ் பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைக் காண உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பலர் சுற்றுலா வந்திருந்தனர். இதில் அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் இருந்து வந்திருந்த மாணவிகள் கென்ட்ரா மில்லர்(18), கிரேஸ்(19) கூறியதாவது:
நாங்கள் இருவரும் அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் கலாசாரம் மற்றும் சுற்றுலா குறித்து படித்து வருகிறோம். உலகின் மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியாவின் கலாசாரம் அதிலும் குறிப்பாக தமிழகத்தின் கலாசாரம் வித்தியாசமானதாக உள்ளது. எனவே இதைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. அதனால் பொங்கலுக்கு தமிழகம் வர முடிவு செய்தோம். இங்குள்ள மக்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர்.

பொங்கலின்போது தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் குறித்து கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், நேரில் பார்க்கும்போது சிலிர்ப்பான அனுபவமாக இருந்தது. மற்ற நாடுகளைப் போல இல்லாமல் இங்கு காளைகளை மிகவும் அன்பாக பார்த்துக்கொள்கின்றனர் என்றனர்.

அயர்லாந்தில் இருந்து வந்திருந்த புகைப்படக் கலைஞர் கெய்ரன் பெர்னான்டஸ் ஜூனியர் கூறியதாவது:
  நான் கடந்த 13 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஜல்லிக்கட்டை ஆவணப்படுத்துவதற்காக அலங்காநல்லூர் வந்தேன். இந்நிலையில் இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடக்காமல் இருந்தது மிகவும் வேதனையாக இருந்தது. ஆனால், தங்கள் பாரம்பரியத்தைக் காப்பதற்காக மக்கள் போராடி மீட்டனர் என்பதைத் தெரிந்துகொண்டபோது மகிழ்ச்சியடைந்தேன்.

ஸ்பெயின்,  இத்தாலி போன்ற நாடுகளில் நடக்கும் காளைச் சண்டைகளில் காளைகள் மிகவும் காயமடைந்து அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்படும். ஆனால், எனக்கு தெரிந்து தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் காளைகள் உயிரிழந்தது போன்ற செய்திகள் நினைவில் இல்லை. பாரம்பரியமிக்க இந்த விளையாட்டை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றார்.

ஸ்காட்லாந்தில் இருந்து வந்திருந்த எலைன் மார்க்கரெட் தாம்ஸ்சன் கூறியதாவது:
  இந்தியாவின் கலாசாரம் மற்றும் பாரம்பரியம் குறித்து புத்தகங்கள் எழுதி வருகிறேன். இதற்காக கடந்த 5 ஆண்டுகளாக இந்தியாவிற்கு தொடர்ந்து வருகைப் புரிந்து வருகிறேன். இதில் வட இந்தியாவின் பல பகுதிகளுக்குச் சென்றுள்ளேன். தமிழகத்திற்கு இதுவே முதல்முறை வருகிறேன். இங்குள்ள மக்களின் பாரம்பரியம் வியப்பாக உள்ளது. காளைகளை இந்தளவுக்கு நேசிக்கும் மக்களை வேறு எங்கும் நான் பார்த்தில்லை.

இந்தியா உலகளவில் பெயர் பெற்றதற்கு அதன் கலாசாரம் முக்கியமானது எனக் கருதுகிறேன். ஜல்லிக்கட்டுப் போட்டியில் ஏற்பாடுகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டிருந்தன. அவனியாபுரம், பாலமேட்டைத் தொடர்ந்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டையும் கண்டேன். மூன்றும் நேர்த்தியான ஒருங்கிணைப்புடன் இருந்தன என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com