வண்டலூர் பூங்காவுக்கு 43, 735 பேர் வருகை: காணும் பொங்கல்

காணும் பொங்கலை முன்னிட்டு வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு செவ்வாய்க்கிழமை 43 ஆயிரத்து 735 பேர் வருகை தந்ததாக பூங்கா நிர்வாகம் தெரிவித்தது.
காணும் பொங்கலை முன்னிட்டு வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் செவ்வாய்க்கிழமை திரண்ட பொதுமக்கள்.
காணும் பொங்கலை முன்னிட்டு வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் செவ்வாய்க்கிழமை திரண்ட பொதுமக்கள்.

காணும் பொங்கலை முன்னிட்டு வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு செவ்வாய்க்கிழமை 43 ஆயிரத்து 735 பேர் வருகை தந்ததாக பூங்கா நிர்வாகம் தெரிவித்தது.
கடந்த 3 நாள்களில் மட்டும் 90 ஆயிரம் பேர் உயிரியல் பூங்காவை பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய உயிரியல் பூங்கா என்ற சிறப்பு பெற்றது. 1,265 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பூங்காவில், 1,500-க்கும் அதிகமான விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 
இதில் பாலூட்டி வகைகளில் 38 இனங்களும், பறவைகளில் 20 இனங்களும், ஊர்வனவற்றில் 14 இனங்களும் வளர்க்கப்படுகின்றன. பொங்கல் திருவிழாவில் முக்கிய நிகழ்வான காணும் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இதன் காரணமாக காலை 8 மணிக்கே வண்டலூர் உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே அதிகளவிளான மக்கள் கூட்டம் பூங்காவில் காணப்பட்டது. 
வர்தாவுக்கு பின்: வர்தா புயல் காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்த பல ஆயிரம் மரங்கள் வேருடன் சாய்ந்தன. பசுமை நிறைந்து காணப்பட்ட பூங்கா வறண்ட பூமியாக மாறியது. இதனால் கடந்தாண்டு பொங்கல் பண்டிகையின் போது பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
காணும் பொங்கலையொட்டி வழக்கமாக செவ்வாய்க்கிழமை பூங்காவுக்கு அளிக்கப்படும் விடுமுறை ரத்து செய்யப்பட்டு, பூங்கா செயல்படும் என்று பூங்கா நிர்வாகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. மேலும் கூட்டம் அதிகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதால் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கே பூங்கா திறக்கப்பட்டது. கூட்ட நெரிசலை சமாளிக்க 30 டிக்கெட் கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.
நெரிசலில் சிக்காமல் இருக்க நுழைவுச் சீட்டுகள் மற்றும் பூங்காவின் இதர வசதிகளை இணையதளத்தின் மூலமாகவும் பதிவு செய்துகொள்ளலாம் என்றும் வண்டலூர் பூங்கா நிர்வாகம் அறிவித்திருந்தது. இதையடுத்து சுமார் 15 ஆயிரம் நுழைவுச் சீட்டுகளை இணையதளம் வாயிலாக பார்வையாளர்கள் பெற்றதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வேடந்தாங்கல், கிண்டி பூங்கா: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள புகழ்ப்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணலாயத்துக்கு செவ்வாய்க்கிழமை 8,500 பேர் வருகை தந்தனர். வேடந்தாங்கல் சரணாலயத்தில் 22 ஆயிரத்துக்கும் அதிகமான பறவைகள் வந்துள்ளதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெளிநாட்டு பறவைகளை அதன் இருப்பிடத்தில் கண்டு ரசித்தனர்.அதேபோல கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவுக்கு 15,700 பேர் காணும் பொங்கல் நாளில் வருகை தந்தனர். பார்வையாளர்களுக்கான அடிப்படை வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டிருப்பதாக பூங்காவை காண வந்த பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com