50 கி.மீ. சுற்றளவுக்கு ஒரு தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையம்: மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்

நாட்டில் ஒவ்வொரு 50 கிலோ மீட்டர் சுற்றளவுக்கும் ஒரு தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையத்தை திறக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா
செல்வமகள் சேமிப்புத் திட்ட பயனாளிக்கு அதற்கான கணக்குப் புத்தகத்தை ( பாஸ்புக்) வழங்குகிறார் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ். உடன் புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி உள்ளிட்டோர்.
செல்வமகள் சேமிப்புத் திட்ட பயனாளிக்கு அதற்கான கணக்குப் புத்தகத்தை ( பாஸ்புக்) வழங்குகிறார் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ். உடன் புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி உள்ளிட்டோர்.

நாட்டில் ஒவ்வொரு 50 கிலோ மீட்டர் சுற்றளவுக்கும் ஒரு தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையத்தை திறக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.
புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மையத்தை திறந்துவைத்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசியது:
புதுச்சேரி மாநிலத்தின் முதலாவது தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையம் காரைக்காலில் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதி மக்கள் காரைக்காலில் இருந்து 160 கி.மீ. தொலைவில் உள்ள புதுச்சேரிக்கு சென்று பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டிய சிரமம் இனி இருக்காது.
நாட்டில் 236 தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையங்களை திறக்க முடிவு செய்யப்பட்டு, இதுவரை 59 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. காரைக்கால் மையம் 60 -ஆவது ஆகும். நாடு முழுவதும் ஒவ்வொரு 50 கி.மீ. சுற்றளவுக்கு ஒரு பாஸ்போர்ட் சேவை மையம் இருக்க வேண்டும் என மத்திய அரசு தீர்மானித்து செயல்பட்டு வருகிறது. 1955 -ஆம் ஆண்டில் 5 பாஸ்போர்ட் அலுவலகங்கள் மட்டுமே செயல்பட்டு வந்த நிலையில், தற்போது நாடு முழுவதும் 37 பாஸ்போர்ட் அலுவலகங்களும், 92 சேவை மையங்களும், 60 தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையங்களும் செயல்பட்டு வருகின்றன.
உலகில் சீனா, அமெரிக்காவுக்கு அடுத்ததாக இந்தியாவில்தான் அதிக அளவு பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு(2017) மட்டும் மொத்தம் 1.79 கோடி பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இது 2016 -ஆம் ஆண்டைக் காட்டிலும் 19 சதவீதம் அதிகமாகும். இதுவரை 15 லட்சம் பாஸ்போர்ட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி பேசியது:
புதுச்சேரி அரசு சார்பில் காரைக்காலில் பாஸ்போர்ட் சேவை மையம் கோரி வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதினேன். அந்தக் கோரிக்கையை ஏற்று, அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அம்மையத்தை தொடங்க அனுமதி அளித்தார். காரைக்கால் மாவட்ட மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசும்போது, அவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்கிறார். அவருக்கு புதுச்சேரி அரசு சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். காரைக்கால் பாஸ்போர்ட் சேவை மையம் விரிவான இடத்தில் இயங்கும் வகையில் தகுதியான இடத்தை புதுச்சேரி அரசு அளிக்கும். காரைக்காலில் திறக்கப்பட்டுள்ள இந்த மையத்தின் மூலம் திருவாரூர், நாகை மாவட்டங்களைச் சேர்ந்தோரும் பெரிதும் பயன்பெறுவர் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன், மக்களவை உறுப்பினர் ஆர். ராதாகிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினர் என். கோகுலகிருஷ்ணன், புதுவை பாஜக தலைவர் வி. சாமிநாதன் ஆகியோர் பேசினர்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் பி.ஆர்.என். திருமுருகன், கே.ஏ.யு. அசனா, கீதாஆனந்தன், சந்திர பிரியங்கா, வெளியுறவுத் துறை இணைச் செயலர் அருண் சாட்டர்ஜி, புதுச்சேரி தலைமைச் செயலர் அஸ்வினிகுமார், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின்போது, செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் சேர்ந்தோருக்கு அதற்கான கணக்குப் புத்தகம், அடல் ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்தோருக்கு சான்றிதழ் ஆகியவற்றை வழங்குவதன் அடையாளமாக பயனாளிகள் சிலருக்கு அவற்றை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com