அமலுக்கு வந்தது பஸ் கட்டண உயர்வு: தனியார் பேருந்துகளிலும் அமல்

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துப் பேருந்துகளின் கட்டணங்களும் சனிக்கிழமை (ஜன. 20) அதிகாலை முதல் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 
அமலுக்கு வந்தது பஸ் கட்டண உயர்வு: தனியார் பேருந்துகளிலும் அமல்

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துப் பேருந்துகளின் கட்டணங்களும் சனிக்கிழமை (ஜன. 20) அதிகாலை முதல் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 
சென்னை நகரில் தொடங்கி அனைத்து ஊர்களிலும் இயக்கப்படும் பேருந்துகளில் புதிதாக விதிக்கப்படும் கட்டண விகிதங்கள் குறித்த பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. புறநகர்களில் இயக்கப்படும் சாதாரணப் பேருந்துகளில் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு இப்போது ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மாற்றியமைக்கப்பட்ட புதிய கட்டணத்தின்படி, இனி ரூ.6 வசூலிக்கப்படும்.
விரைவுப் பேருந்துகளில் 30 கிலோ மீட்டர் வரையில் இப்போது ரூ.17 என்ற அளவில் வசூலிக்கப்படும் கட்டணம் இனி ரூ.24 ஆக உயர்த்தப்படும். இடைநில்லாப் பேருந்துகளில் 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு வசூலிக்கப்பட்டு வந்த ரூ.18 கட்டணம் இனி ரூ.27-ஆக வசூலிக்கப்படும்.
அதிநவீன சொகுசுப் பேருந்துகளில் 30 கிலோ மீட்டர் தூரத்துக்கான கட்டணம் ரூ.21-லிருந்து ரூ.33 ஆகவும், குளிர்சாதனப் பேருந்துகளில் ரூ.27-லிருந்து ரூ.42 ஆகவும், வால்வோ பேருந்துகளில் ரூ.33-லிருந்து ரூ.51 ஆகவும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
நகரப் பேருந்துகள்: சென்னை, கோவை உள்பட பல்வேறு மாநகரப் பேருந்துகளின் கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் இப்போது குறைந்தபட்ச கட்டணமாக உள்ள ரூ.3 இனி ரூ.5 ஆக உயர்த்தப்படும்.
அதிகபட்சமாக இப்போது வசூலிக்கப்பட்டு வரும் ரூ.12 கட்டணமானது ரூ.19 ஆக உயர்த்தப்படும். சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் ரூ.3-லிருந்து ரூ.5 ஆகவும், அதிகபட்சக் கட்டணம் ரூ.14-லிருந்து ரூ.23 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
குளிர்சாதனப் பேருந்துகள்: சென்னை போன்ற நகரங்களில் இயக்கப்படும் குளிர்சாதனப் பேருந்துகளில் இப்போது வசூலிக்கப்படும் குறைந்தபட்ச கட்டணம் ரூ.15-லிருந்து ரூ.25 -ஆக அதிகரிக்கப்படும். ரூ.100 என்ற அளவில் உள்ள அதிகபட்சக் கட்டணமானது ரூ.150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
காரணம் என்ன?: பணியாளர்களுக்கான வருடாந்திர ஊதியம், ஓய்வூதியங்கள், எரிபொருள்களின் விலை, இயக்கத் திறனை அதிகரிக்கும் வகையில் புதிய பேருந்துகள் வாங்குதல், பேருந்துகள் பராமரிப்பு ஆகிவற்றுக்கான செலவுகள் கடுமையாக உயர்ந்துள்ளன.
கடைசியாக 6 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.43.10 ஆக இருந்தது. இன்று ரூ.65.83 என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. அதாவது, சுமார் 50 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு பேருந்துக் கட்டணங்களை மாற்றி அமைக்க வேண்டிய தவிர்க்க முடியாத சூழ்நிலைக்குத் தமிழக அரசு தள்ளப்பட்டுள்ளது என்று அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியாருக்கும் பொருந்தும்: சென்னை மாவட்டத்தைத் தவிர்த்து, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தனியார் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகளிலும் புதிய கட்டண உயர்வு நடைமுறைக்கு வரும் என அரசு தெரிவித்துள்ளது.

இன்று முதல் பேருந்து கட்டணம் எவ்வளவு?: புதிய கட்டண விவரம்


6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உயர்வு
தமிழகத்தில் பேருந்துக் கட்டணம் 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
2011 சட்டப் பேரவையில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள போக்குவரத்துக் கழகங்களை மீட்கும் நடவடிக்கையாகப் பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, கடந்த 2011-ஆம் ஆண்டு நவ.18-ஆம் தேதி பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன.
மீண்டும் உயர்வு: 2016 சட்டப் பேரவைத் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது. இந்நிலையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கு ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டுப் போராட்டம் நடத்தினர். அப்போது போக்குவரத்துத் துறை நஷ்டத்தில் இயங்குவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து, இப்போது போக்குவரத்துக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இனி அதிகாரிகள் குழுவே கட்டணம் நிர்ணயிக்கும்
பேருந்துகளுக்கான கட்டண உயர்வை நிர்ணயிப்பதில் புதிய நடைமுறை பின்பற்றப்பட உள்ளது. 
இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்:
எதிர்காலத்தில் எரிபொருள், மசகு எண்ணெய் விலை ஏற்றங்கள், இயக்கச் செலவுகள், பழுது நீக்கும் செலவுகள், பராமரிப்புச் செலவுகள் ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்படும். மேலும், பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு ஆகிய அம்சத்தையும் உள்ளடக்கிய அளவீட்டு குறியீடு அடிப்படையில் இனி கட்டண உயர்வு நிர்ணயிக்கப்படும். இந்த உயர்வு அதிகாரிகளைக் கொண்ட குழுவினால் மாற்றியமைக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com