தமிழக ஊரக வளர்ச்சித்திட்டங்களின் செயல்பாடு: எம்பிக்கள் குழு பாராட்டு

தமிழகத்தில் ஊரக வளர்ச்சித் திட்டங்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது ஊரக வளர்ச்சிக்கான நாடாளுமன்ற நிலைக் குழுத்தலைவர் பி.வேணுகோபால் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஊரக வளர்ச்சித் திட்டங்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது ஊரக வளர்ச்சிக்கான நாடாளுமன்ற நிலைக் குழுத்தலைவர் பி.வேணுகோபால் தெரிவித்தார்.
மத்திய, மாநில அரசுகளின் நிதியில் ஊரகப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை ஆய்வு செய்ய மக்களவை உறுப்பினர் பி.வேணுகோபால் தலைமையிலான ஊரக வளர்ச்சிக்கான நாடாளுமன்ற குழு திங்கள்கிழமை மதுரை மாவட்டத்துக்கு வருகை தந்தது. இக் குழுவில் மக்களவை உறுப்பினர்கள் ஹரிச்சந்திர சவான், பிரகலாத் சிங் படேல், ஜுகல் கிஷோர் சர்மா, டாக்டர் யஷ்வந்த் சிங், லாடு கிஷோர் ஸ்வைண், ஜாவத் அலி கான், சாந்தா செட்ரி உள்ளிட்ட 12 பேர் மற்றும் மக்களவை செயலக அதிகாரிகள் அபிஷித் குமார், எஸ்.சாட்டர்ஜி, சதீஷ் குமார் வி.ஸ்ரீனிவாசன் உள்ளிடோரும் இடம் பெற்றிருந்தனர். 
இக் குழுவினர் மதுரையை அடுத்த நாகமலைப் புதுக்கோட்டை ஆழ்வார் நகரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட அங்கன் வாடி மையத்தைப் பார்வையிட்டனர். அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கான சத்துணவு வழங்கப்படுவது, கர்ப்பிணிகள், தாய்மார்கள், வளர் இளம்பெண்களுக்கான இணை உணவு வழங்கப்படுவது குறித்து ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் குழுவினருக்கு விளக்கினார்.
பின்னர் அலங்காநல்லூர் அருகே அச்சம்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள கிராம சேவை மையத்தைப் பார்வையிட்டனர். இக் கிராமத்தைச் சேர்ந்த 70 வயது முதிய தம்பதி தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டி பயன்படுத்துவதை குழுவினர் பாராட்டினர். அதைத்தொடர்ந்து பி.மேட்டுப்பட்டியில் உள்ள காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்ட நீர்உந்தும் நிலையம், வாவிடைமருதூர் கிராமத்தில் நீர்வடிப் பகுதி மேம்பாட்டு முகமையின் கீழ் கட்டப்பட்டுள்ள தடுப்பணை, சத்திரப்பட்டியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் குப்பைகளில் உரம் தயாரிப்பு ஆகிய திட்டப் பணிகளை நாடாளுமன்ற நிலைக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
ஆட்சியர் கொ.வீரராகவ ராவ், ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குநர் முத்துமீனா ஆகியோர் திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர். 
மதுரை மக்களவை உறுப்பினர் கே.கோபால கிருஷ்ணன், சோழவந்தான் சட்டப்பேரவை உறுப்பினர் கே.மாணிக்கம், மதுரை கோட்டாட்சியர் கார்த்திகேயன், மகளிர் திட்ட அலுவலர் அருண்மணி உள்ளிட்டோர் ஆய்வின்போது உடன் இருந்தனர்.
மத்திய பிரதேச எம்பி வியப்பு
நாடாளுமன்ற நிலைக் குழு ஆய்வுக்கு வந்த இடங்களில் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பாரம்பரிய முறைப்படி பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். மேலும் ஆய்வு செய்த இடங்களில் அந்தந்த பகுதி மகளிர் குழுவினர் தயாரித்த கைவினைப் பொருள்களின் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. பல எம்பி-க்கள் பொம்மை, பனை ஓலை கூடை ஆகியவற்றை பணம் கொடுத்து வாங்கினர்.
நாகமலை புதுக்கோட்டை அங்கன்வாடி மையத்தில் ஆய்வு செய்தபோது, இதேபோல எத்தனை மையங்கள் உள்ளன, அவற்றையும் பார்வையிடலாமா என குழுவினர் கேள்வி எழுப்பினர். இருப்பினும் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட இடங்களுக்கு மட்டுமே குழுவினர் அழைத்துச் செல்லப்பட்டனர்.
சத்திரப்பட்டியில் உரக்கிடங்கு வளாகத்தில் எம்பிக்கள் குழு வருகையையொட்டி மத்திய, மாநில அரசுகளின் ஊரக வளர்ச்சித் துறை திட்டங்கள் குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதைப் பார்வையிட்ட நிலைக் குழு உறுப்பினர் மத்திய பிரதேச மாநில எம்பி-யுமான பிரகலாத் சிங் படேல், ஊரக வளர்ச்சித் துறையில் இத்தனை திட்டங்கள் இருக்கிறதா என ஆச்சரியத்தைத் தெரிவித்தார். இந்த கண்காட்சியில் இதுபோன்ற திட்டங்கள் இருப்பதையே தெரிந்து கொண்டோம் என்றும் அவர் கூறினார்.
பி.மேட்டுப்பட்டி காவிரி குடிநீர்த் திட்ட நீர்உந்து நிலையத்துக்கு வந்த நாடாளுமன்ற நிலைக் குழு உறுப்பினர்களுக்கு சோழவந்தான் சட்டப்பேரவை உறுப்பினர் கே.மாணிக்கம் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தார். அப்போது அவரது சட்டைப் பையில் இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தைப் பார்த்து மேற்கு வங்க எம்பி சாந்தா செட்ரி கேள்வி எழுப்பினர். ஜெயலலிதாவின் புகைப்படம் எனக் குறிப்பிட்ட எம்எல்ஏ மாணிக்கம், அதை வைத்துக் கொள்ளுமாறு சாந்தா செட்ரியிடம் அளித்தார். கண்களில் ஒற்றிக் கொண்ட மேற்கு வங்க எம்பி அந்த படத்தை தனது கைப்பையில் வைத்துக் கொண்டார்.
வாவிடைமருதூர் கிராமத்தில் ஆய்வு செய்தபோது, ஜல்லிக்கட்டுக் காளை அழைத்து வரப்பட்டது. ஜல்லிக்கட்டு காளையைத் தொட்டு வணங்கிய எம்பி-க்கள் அவற்றுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com