புதுவையில் மக்களுக்கு சுமையே இல்லாத வகையில் பேருந்துக் கட்டண உயர்வு: முதல்வர் நாராயணசாமி

புதுவையில் மக்களுக்கு சுமையே இல்லாத வகையில் பேருந்துக் கட்டண உயர்வு இருக்கும் என்று அந்த மாநில முதல்வர் வி.நாராயணசாமி கூறினார்.

புதுவையில் மக்களுக்கு சுமையே இல்லாத வகையில் பேருந்துக் கட்டண உயர்வு இருக்கும் என்று அந்த மாநில முதல்வர் வி.நாராயணசாமி கூறினார்.
திருவண்ணாமலை அருணை தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் கலந்து கொள்ள வந்த புதுவை முதல்வர் வி.நாராயணசாமி திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு வந்தார். அங்கு கட்சியின் செயல்பாடு குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுவை மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை என்பதே கிடையாது. இதற்குக் காரணம் புதுவை அரசு விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம், பயிர்க் காப்பீடு, முழுக் கடன் தள்ளுபடி என மூன்று வகையான சலுகைகளை அளித்து வருகிறது.
டெங்கு தடுப்புப் பணியில் தீவிரமாகச் செயல்பட்டதால் புதுவை மாநில மக்கள் 60 சதவீதம் பேரும், தமிழக மக்கள் 40 சதவீதம் பேரும் பயன் பெற்றனர்.
தற்போது காவல் துறை முடுக்கி விடப்பட்டுள்ளதால், புதுவை மாநிலம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது.
இதனால், வாரந்தோறும் விடுமுறை நாளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்கு வருகின்றனர்.
புதுச்சேரியில் இருந்து பெங்களூருவுக்கு பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்கப்பட உள்ளது. புதுச்சேரி மக்களுக்கு சுமையே இல்லாத வகையில் பேருந்துக் கட்டண உயர்வு இருக்கும்.
அரசு நிர்வாகத்தில் ஆளுநரின் தலையீடு குறித்து குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சரிடம் முறையிட்டுள்ளேன்.
மாநில அரசுகளின் உரிமையை பாஜக அரசு பறித்து வருகிறது. மாநில அரசுகளை பலவீனப்படுத்தி, வீழ்த்த நினைக்கிறார்கள். இதற்கு தமிழகமே சிறந்த உதாரணம். வரவுள்ள 2019 
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும். ராகுல் காந்தி இந்திய பிரதமராவார் என்றார் அவர்.
பேட்டியின் போது, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் செங்கம் ஜி.குமார், மாவட்டத் துணைத் தலைவர் சீனுவாசன், நகரத் தலைவர் என்.வெற்றிச்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com