சரியான தீர்ப்பு வழங்குவதே நீதிபதிகளின் நோக்கமாக இருக்கவேண்டும்: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி

தரத்துடன் கூடிய சரியான தீர்ப்பு வழங்குவதையே நீதிபதிகள் முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும் என்று,
சரியான தீர்ப்பு வழங்குவதே நீதிபதிகளின் நோக்கமாக இருக்கவேண்டும்: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி

தரத்துடன் கூடிய சரியான தீர்ப்பு வழங்குவதையே நீதிபதிகள் முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அறிவுறுத்தியுள்ளார். ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் எழுதிய "ஈடேற்றும் சமத்துவம்' என்ற நூல் வெளியீட்டு விழா, மதுரையில், நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
 இதில் அவர் பேசியதாவது: நாட்டில் உள்ள மற்ற உயர் நீதிமன்றங்களுடன் ஒப்பிடுகையில், சென்னை உயர் நீதிமன்றத்தில்தான் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. இருப்பினும், தற்போதுள்ள 63 நீதிபதிகளில் 12 பேர் மட்டுமே பெண் நீதிபதிகள் உள்ளனர். அதிலும், குறிப்பாக கடந்த 50 ஆண்டுகளில் 5 பெண் நீதிபதிகள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை போதுமானதல்ல. நீதித் துறையில் உள்ள பாலின பாகுபாடு விரைவில் களையப்படும் என நம்புகிறேன்.
 வழக்குரைஞர் தொழிலுக்கு வரும் பெண்கள் பெரும்பாலும் அவர்களது வீட்டில் போதிய ஆதரவு இல்லாத காரணத்தால், இந்தத் தொழிலை பாதியில் கைவிடுகின்றனர். பெண்களுக்கு போதிய ஆதரவு இருந்திருந்தால், பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை உயர்ந்திருக்கக்கூடும். ஓய்வுபெற்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவனை அவரது கணவர் உற்சாகப்படுத்தியுள்ளார். இந்த ஆதரவு அனைத்துப் பெண்களுக்கும் அவசியமானது. பாலின பாகுபாடு என்பது வீட்டிலேயே களையப்பட்டால், சமூகத்தில் பெண்களுக்கான மரியாதை தானாகக் கிடைக்கும்.
 மொழிப்புலமை என்பது வழக்குரைஞர்கள் பணிக்கு மிகவும் முக்கியமானது. தாய் மொழியிலும், ஆங்கில மொழியிலும் புலமைப் பெறுவது அவசியம். நீதித் துறையில் பணியாற்றுபவர்கள் இதை ஒரு தொழிலாகக் கருதாமல், சேவையாகக் கருதி பணியாற்ற வேண்டும்.
 உரிய நேரத்தில், சரியான நீதிக்காக இங்கு பலர் காத்துக் கிடக்கின்றனர். இந்தத் தொழிலை மக்களுக்கும், சமூகத்துக்கும் சேவையாற்ற கிடைத்த ஒரு வாய்ப்பாக அனைவரும் கருதவேண்டும்.
 இதேபோல், நீதிபதிகளும் சமூகத்தின் மீது தங்கள் பார்வையை வைத்திருப்பது அவசியம். வழக்கு விசாரணையில் உண்மையை முறையாக ஆராய்ந்து, வாதங்களுக்கு முக்கியத்துவம் அளித்து சரியான தீர்ப்பை வழங்க வேண்டும். நீதித் துறையை மற்ற துறைகளுடன் எளிதில் ஒப்பிட்டுவிட முடியாது.
 நீதி கோரும் அனைவருக்கும் நீதிமன்றங்களை நாடும் உரிமை உள்ளது. உயர் நீதின்றங்களில் வழக்குகள் அதிகளவில் நிலுவையில் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். எனவே, நீதிபதிகள் வழக்குகளை முறையாக ஆராய்ந்து தரத்துடன் கூடிய சரியான தீர்ப்பு வழங்குவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும் என்றார்.
 நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எஃப்.எம். இப்ராஹிம் கலிஃபுல்லா, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், அனிதா சுமந்த், ஆர். சுரேஷ்குமார், மதுரை மாவட்ட முதன்மை நீதிபதி எஸ். சத்திகுமார், மாவட்டத் தலைமை குற்றவியல் நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழக்குரைஞர்கள் சங்க (எம்எம்பிஏ) தலைவர் கு. சாமித்துரை, பெண் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் கிருஷ்ணவேணி, நீதிபதி சிவராஜ் வி. பாட்டீல் அறக்கட்டளை அறங்காவலர் எஸ். செல்வகோமதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com