ஜியோ பல்கலை.க்கு உலகத்தர பல்கலை. தகுதி: மத்திய அரசுக்கு அன்புமணி கண்டனம்

ஜியோ பல்கலைக்கழகத்துக்கு உலகத்தர பல்கலைக்கழக தகுதி அளிக்கப்பட்டுள்ளதற்காக, மத்திய அரசுக்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜியோ பல்கலைக்கழகத்துக்கு உலகத்தர பல்கலைக்கழக தகுதி அளிக்கப்பட்டுள்ளதற்காக, மத்திய அரசுக்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
இந்தியாவின் 3 அரசு பல்கலைக்கழகங்களுக்கும், 3 தனியார் பல்கலைக் கழகங்களுக்கும் உலகத்தர பல்கலைக்கழகங்கள் என்ற தகுதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. 10 அரசுப் பல்கலைக்கழகங்கள், 10 தனியார் பல்கலைக்கழகங்கள் என மொத்தம் 20 நிறுவனங்களை உலகத்தர பல்கலைக்கழகங்களாக அறிவிக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், பெங்களூரு இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் (ஐஐஎஸ்சி), மும்பை இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், தில்லி இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் ஆகிய 3 அரசு நிறுவனங்களையும், பிட்ஸ் பிலானி, மணிப்பால் உயர்கல்வி நிறுவனம், ஜியோ பல்கலைக்கழகம் ஆகிய 3 தனியார் பல்கலைக்கழகங்களை மட்டும் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசுவாமி தலைமையிலான குழு முதல்கட்டமாக தேர்வு செய்துள்ளது.
இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதல் 5 நிறுவனங்களின் தகுதி குறித்து எந்த ஐயமும் இல்லை. ஆனால், ஆறாவதாக இடம் பெற்றுள்ள ஜியோ பல்கலைக்கழகத்துக்கு முகவரிகூட இல்லாத நிலையில், அதற்கு உலகத்தரத் தகுதி எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது எனத் தெரியவில்லை.
மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அர்ஜுன்சிங் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது, கோவை பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 14 பல்கலைக் கழகங்களை உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களாக அறிவித்து, அவற்றுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டது.
கிடப்பில் போடப்பட்ட அத்திட்டத்தைத் தான், மோடி அரசு மாற்றியமைத்து தனியார் பல்கலைக்கழகங்களுக்கு சாதகமாகச் செயல்படுத்தத் துடிக்கிறது.
எனவே, ஒரு சில பல்கலைக்கழகங்களை மட்டும் மேம்படுத்தும் திட்டத்தைக் கைவிட்டு, ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு பல்கலைக்கழகத்தைத் தேர்வு செய்து, அதை மாநில அரசுகளின் உதவியுடன் அவற்றை மேம்படுத்தும் முந்தைய அரசின் திட்டத்தையே செயல்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என்று அன்புமணி கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com