தமிழில் தேர்வெழுதியோருக்கு ஆதரவான நிலைப்பாடு

தமிழில் நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்கும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
தமிழில் தேர்வெழுதியோருக்கு ஆதரவான நிலைப்பாடு

தமிழில் நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்கும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார். இதுதொடர்பாக சென்னை பெசன்ட்நகரில் புதன்கிழமை அவர் அளித்த பேட்டி:
நீட் தேர்வில் தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கும் விவகாரத்தில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துக்கு (சிபிஎஸ்இ) சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. நீதிமன்றம் அளித்த உத்தரவின் விரிவான நகல் இன்னும் கிடைக்கவில்லை. அது கிடைக்கப்பெற்ற பின்னர் சிபிஎஸ்இயின் நிலைப்பாட்டைப் பொருத்து தமிழக அரசின் நடவடிக்கை இருக்கும். தமிழக அரசின் நடவடிக்கையானது தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு ஆதரவாகவே இருக்கும் என்றார் அவர்.
முன்னதாக, பெசன்ட்நகரில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்கள் மற்றும் செவிலியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
அதில் அமைச்சர் பேசுகையில், மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழகம் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது. இந்தியாவின் மக்கள் தொகை 135.5 கோடி, தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 8.09 கோடி ஆகும். கடந்த 7 ஆண்டுகளில் 21.16 லட்சம் பெண்களுக்கு குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 21.17 லட்சம் தாய்மார்களுக்கு கருத்தடை வளையங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக இதுவரை சுமார் 3 
கோடி பிறப்புகள் தடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 78.1 சதவீத தாய்மார்கள் இரண்டு குழந்தைகளுக்கு பிறகு குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்கின்றனர். 
உயர் பிறப்பு விகிதம் அதிகமுள்ள 21 மாவட்டங்களில் 120 வட்டாரங்களை கண்டறிந்து, சிறப்பு குடும்பக் கட்டுப்பாடு முகாம்கள் ரூ.2.18 கோடி செலவில் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலமாக 30 சதவீத பிரசவ கால மரணங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன' என்றார். 
சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com