பி.இ. பொதுப் பிரிவு கலந்தாய்வு தேதி இன்று முடிவாகிறது

அண்ணா பல்கலைக்கழக மனு உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதால், பி.இ. முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்குவதற்கான கால நீட்டிப்புக்கு

அண்ணா பல்கலைக்கழக மனு உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதால், பி.இ. முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்குவதற்கான கால நீட்டிப்புக்கு அனுமதி கிடைக்குமா என்பது தெரிந்துவிடும். 
அவ்வாறு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துவிட்டால், பி.இ. பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்குவதற்கான தேதி உடனடியாக இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் உள்ள 509 பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள அரசு ஒதுக்கீட்டு பி.இ. இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. இந்த ஆண்டு, முதன் முறையாக பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு முழுவதும் ஆன்-லைன் மூலம் நடத்தப்படுகிறது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப் படி, பி.இ. முதலாமாண்டு வகுப்புகளை ஆகஸ்ட் 1-ஆம் தேதி தொடங்கியாக வேண்டும். அதன் காரணமாக பி.இ. கலந்தாய்வை ஜூன் இறுதி வாரத்தில் அல்லது ஜூலை முதல் வாரத்தில் தொடங்கி, ஜூலை 30-ஆம் தேதிக்குள் முடிப்பதை பல்கலைக்கழகம் வழக்கமாகக் கொண்டுள்ளது. 
இதில், பி.இ. பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வை எத்தனை நாள்கள் நடத்துவது, எப்போது தொடங்குவது என்பது, எம்.பி.பி.எஸ். முதல்கட்ட கலந்தாய்வைப் பொருத்து நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. பி.இ. கலந்தாய்வுக்கு விண்ணப்பித்திருக்கும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் மருத்துவப் படிப்பில் சேர்ந்துவிட வாய்ப்புள்ள காரணத்தால், இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
கூடுதல் அவகாசம் கேட்பது ஏன்? இந்த நிலையில், 2018-19 கல்வியாண்டுக்கான எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு சற்று தாமதமாக தொடங்கப்பட்டது. அதாவது, எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 1-ஆம் தேதி தொடங்கி 7-ஆம் தேதி நிறைவடைந்தது.
இதன் காரணமாக, பி.இ. கலந்தாய்வை ஜூலை முதல் வாரத்தில் தொடங்க இயலாமல் போனது. அது மட்டுமின்றி, மீதமுள்ள 20 நாள்களில் கலந்தாய்வை நடத்தி முடிக்க இயலாது என்பதால், கலந்தாய்வை நடத்த கூடுதல் கால அவகாசம் கேட்டும், பி.இ. முதலாமாண்டு வகுப்புகளை ஆகஸ்ட் 2-ஆவது வாரத்தில் தொடங்க அனுமதிக்கக் கோரியும் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 
இன்று விசாரணை: இந்த மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியது: கால நீட்டிப்புக்கு அனுமதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீது வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற உள்ளது. இந்த மனுவை விசாரிக்கும் உச்ச நீதிமன்றம், கால நீட்டிப்புக்கு அனுமதி அளிக்கும் என நம்புகிறோம். அவ்வாறு அனுமதி கிடைத்துவிட்டால், பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்கும் தேதி, பி.இ. முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கும் தேதியும் உடனடியாக இறுதி செய்யப்பட்டு விடும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com