மருத்துவக் கலந்தாய்வுக்கான விளையாட்டுப் பிரிவு தரவரிசைப் பட்டியலை ரத்து செய்யக்கோரி மனு: மருத்துவக் கல்வி இயக்ககம் பதிலளிக்க உத்தரவு

மருத்துவக் கலந்தாய்வுக்கான விளையாட்டுப் பிரிவு தரவரிசைப் பட்டியலை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக, தமிழக மருத்துவக் கல்வி இயக்கக தேர்வுக் குழுச் செயலர்

மருத்துவக் கலந்தாய்வுக்கான விளையாட்டுப் பிரிவு தரவரிசைப் பட்டியலை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக, தமிழக மருத்துவக் கல்வி இயக்கக தேர்வுக் குழுச் செயலர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த மாணவி என்.சேரல் யாழினி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
நான் 2016-இல் பிளஸ் 2 முடித்தேன். விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் உள்ளதால் 2012-2016 ஆம் ஆண்டுகளில் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் விளையாடி மண்டல, மாவட்ட அளவில் பல பதக்கங்களை வென்றுள்ளேன். இந்நிலையில் 2016-இல் பிளஸ் 2 முடித்திருந்தாலும் வேறு படிப்பில் சேராமல் நீட் தேர்வு எழுதி தேர்வு பெற்றேன். 
இதில் விளையாட்டுப் பிரிவு கலந்தாய்வு கடந்த ஜூலை 1 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஜூன் 30-இல் விளையாட்டுப் பிரிவு மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் என் பெயர் இல்லை.
மாவட்ட அளவிலான போட்டிகளில் தங்கப்பதக்கம் பெற்றவர்களுக்கு 45 மதிப்பெண்களும், வெள்ளிப் பதக்கம் பெற்றவர்களுக்கு 30 மதிப்பெண்களும், வெண்கலப் பதக்கம் பெற்றவர்களுக்கு 15 மதிப்பெண்களும் வழங்கப்படும். மண்டல அளவிலான போட்டிகளில் தங்கப் பதக்கத்துக்கு 60 மதிப்பெண்களும், வெள்ளிப் பதக்கத்துக்கு 45 மதிப்பெண்களும், வெண்கல பதக்கத்துக்கு 30 மதிப்பெண்களும் வழங்கப்படும்.
நான் மாவட்ட அளவில் 7 தங்கப் பதக்கமும், மண்டல அளவில் தலா இரண்டு வெள்ளி, வெண்கலப் பதக்கங்களும் பெற்றுள்ளேன். மேலும் நீட் தேர்வில் 465 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். ஆனால், விளையாட்டுப் பிரிவில் 44 பேர் மட்டுமே தகுதியானவர்கள் என அறிவித்துள்ளனர்.
இந்த 44 பேரும் 110 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுள்ளனர். ஜூலை 1 ஆம் தேதி விளையாட்டுப் பிரிவு கலந்தாய்வுக்குச் சென்றபோது பட்டியலில் எனது பெயர் இல்லை எனக்கூறி திருப்பி அனுப்பிவிட்டனர். ஆனால், என்னைவிட குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
எனவே, ஜூன் 30-ம் தேதி வெளியிடப்பட்ட மருத்துவக் கலந்தாய்வுக்கான விளையாட்டுப் பிரிவு தரவரிசை பட்டியலை ரத்து செய்து, புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு மருத்துவ சேர்க்கை நடத்த உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன், திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து தமிழக மருத்துவ கல்வி இயக்கக தேர்வுக் குழுச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் ஆகஸ்ட் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com