என்பிஏ அங்கீகாரம் பெற்ற பொறியியல் படிப்புகளுக்கு மட்டுமே இடங்களை அதிகரித்துக் கொள்ள அனுமதி: ஏஐசிடிஇ தலைவர் அனில் சஹஸ்ரபுத்தே

தேசிய அங்கீகார வாரியத்தின் (என்.பி.ஏ.) அங்கீகாரம் பெற்ற பொறியியல் படிப்புகளில் மட்டுமே, மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரித்துக் கொள்ள இனி அனுமதிக்கப்படும்
என்பிஏ அங்கீகாரம் பெற்ற பொறியியல் படிப்புகளுக்கு மட்டுமே இடங்களை அதிகரித்துக் கொள்ள அனுமதி: ஏஐசிடிஇ தலைவர் அனில் சஹஸ்ரபுத்தே

தேசிய அங்கீகார வாரியத்தின் (என்.பி.ஏ.) அங்கீகாரம் பெற்ற பொறியியல் படிப்புகளில் மட்டுமே, மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரித்துக் கொள்ள இனி அனுமதிக்கப்படும் என அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் (ஏஐசிடிஇ) தலைவர் அனில் சஹஸ்ரபுத்தே கூறினார். அடுத்த கல்வியாண்டு முதல் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை ஏஐசிடிஇ ஒழுங்குபடுத்தும் எனவும் அவர் கூறினார்.
அடுத்த கல்வியாண்டுக்கான (2019-20) பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகளின் அங்கீகார நடைமுறை குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம், சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் அரசு, தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகிகள் பங்கேற்று பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இந்தக் கூட்டத்துக்கு பின்னர் அனில் சஹஸ்ரபுத்தே அளித்த பேட்டி:
பொறியியல் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில், பாடவாரியான அங்கீகாரம் குறித்த கேள்வியை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும், நீதி ஆயோக்கும் எழுப்பியுள்ளன.
அதனடிப்படையில், பொறியியல் கல்லூரிகளில் என்.பி.ஏ. அங்கீகாரம் பெற்ற பொறியியல் துறைகளில் மட்டுமே மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரித்துக் கொள்ளவும், விரிவாக்கத்துக்கும் இனி அனுமதி வழங்குவது என ஏஐசிடிஇ முடிவெடுத்துள்ளது. மேலும், அடுத்த 4 ஆண்டுகளில் கல்லூரிகளில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு படிப்புகளுக்கு என்.பி.ஏ. அங்கீகாரம் பெறுவது கட்டாயமாக்கப்படும்.
நிகர்நிலைப் பல்கலை. கட்டுப்பாடு: தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் அதிக எண்ணிக்கையில் பொறியியல் இடங்கள் இடம்பெற்றிருப்பதால், சிறு பொறியியல் கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் போதிய மாணவர் சேர்க்கையின்றி அவதிப்படுவதாக, இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பல்வேறு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகிகள் புகார் தெரிவித்தனர். 
நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் கட்டுப்பாடின்றி 3,000 முதல் 4,000 பொறியியல் இடங்களை வைத்துக் கொண்டு நிரப்பி வருகின்றன. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள பொறியியல், தொழில்நுட்பப் படிப்புகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பான விவகாரத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு நவம்பரில்தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, இதைக் கட்டுப்படுத்தும் முழுப் பொறுப்பும் ஏஐசிடிஇ வசம் வந்துள்ளது. எனவே, நிகர்நிலைப் பல்கலைக்கழக பொறியியல் படிப்புகளையும் அடுத்த கல்வியாண்டு (2019-20) முதல் ஏஐசிடிஇ ஒழுங்குப்படுத்தும்.
ஒரே நுழைவுத் தேர்வு: பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஒரே நுழைவுத் தேர்வை கொண்டு வருவது குறித்து 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆலோசிக்கப்பட்டது. இதற்கு பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. தற்போது, மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. எனவே, அதனடிப்படையில் பொறியியல் படிப்புகளுக்கும் ஒரே நுழைவுத் தேர்வை கொண்டு வருவதற்கான முயற்சியை ஏஐசிடிஇ மீண்டும் மேற்கொள்ளும்.
சிக்கல் இல்லை: புதிதாக, இந்திய உயர் கல்வி ஆணையம் வருவதால், கட்டடவியல் பொறியியல் (பி.ஆர்க்.) மற்றும் மருந்தியல் (ஃபார்மா) படிப்புகளை ஏஐசிடிஇ கட்டுப்படுத்துவதில் எந்தச் சிக்கலும் ஏற்படப் போவதில்லை. இந்தப் படிப்புகளுக்கும் அங்கீகாரம் வழங்கும் பணியை ஏஐசிடிஇ தொடர்ந்து மேற்கொள்ளும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com