நடத்துநர் இல்லா பேருந்து சேவை படிப்படியாக விரிவுபடுத்தப்படும்

தமிழகத்தில் இயக்கப்பட்டு வரும் நடத்துநர் இல்லா பேருந்துகளுக்கு பொது மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து படிப்படியாக பிற ஊர்களுக்கும் இப்புதிய திட்டம் விரிவுபடுத்தப்படும்
நடத்துநர் இல்லா பேருந்து சேவை படிப்படியாக விரிவுபடுத்தப்படும்

தமிழகத்தில் இயக்கப்பட்டு வரும் நடத்துநர் இல்லா பேருந்துகளுக்கு பொது மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து படிப்படியாக பிற ஊர்களுக்கும் இப்புதிய திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியது: மக்கள் அதிக அளவில் பயணம் செய்யும் வழித்தடங்களில் நடத்துநர் இல்லா பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் நோக்கம் பயண நேரத்தைக் குறைப்பது, பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு விரைந்து செல்வதே.
மக்களிடையே வரவேற்பு: இந்தப் புதிய திட்டத்தின் மூலம் குறிப்பாக திருவண்ணாமலை - சென்னை பயண நேரம் 1.15 மணி நேரம் குறைந்துள்ளது. வருவாயும் அதிகரித்துள்ளது. கரூர் - கோவை பயண நேரம் சாதாரண பேருந்துகளில் 3.30 மணி நேரமாக இருந்தது. அது தற்போது 2.30 மணி நேரமாக குறைந்துள்ளது. இதனால் பொதுமக்களிடம் இத்திட்டம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து இச்சேவை பிற இடங்களுக்கும் படிப்படியாக விரிவுப்படுத்தப்படும்.
பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்: இதன் காரணமாக, பொது மக்கள் தனியார் மற்றும் தங்கள் சொந்த வாகனங்களில் செல்வதைத் தவிர்த்து அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை அதிகமாக பயன்படுத்தும் நிலை உருவாகும். இதனால் அரசுப் போக்குவரத்துக் கழகம் இழந்துள்ள பயணிகளின் எண்ணிக்கை சீரடையும். இடைநிறுத்தம் இல்லா பேருந்துகள் அனைத்தும் தரமான கட்டமைப்பைக் கொண்டவை. செல்லும் வழியில் தொழில்நுட்ப குறைபாடுகள் ஏதேனும் நிகழ்ந்தால் உரிய தகவல் அருகாமையில் உள்ள பணிமனைக்கு தெரிவிக்கப்பட்டு உடனடியாக சரி செய்யப்படும்.
முதல்வரிடம் கோரிக்கை: அதிகரித்து வரும் டீசல் உயர்வால் போக்குவரத்துக் கழகங்களுக்கு மேலும் நிதிச்சுமை அதிகரித்துள்ளது.
எனினும் பேருந்துக் கட்டணத்தை உயர்த்துவது குறித்த திட்டம் எதுவும் இல்லை. நிதிச் சுமை மற்றும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்கள் ஆகியவற்றுக்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஷேர் ஆட்டோக்கள் பிரச்னை: சென்னை மாநகரில் ஷேர் ஆட்டோக்கள் அதிகரித்து வருவது குறித்த புகார் வந்துள்ளது. மக்களின் தேவை, பயன்பாட்டைக் கருத்தில்கொண்டு இதுபோன்ற ஷேர் ஆட்டோக்கள் இயக்க அனுதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் மாநகர் போக்குவரத்துப் பேருந்துகளுக்கு இடையூறு செய்யும் வகையில் இயங்கும் ஷேர் ஆட்டோக்கள் மீது அவ்வப்போது உரிய நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. 
விரைவில் மின்கலன் பேருந்துகள்: சென்னை மாநகரில் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் மின்கலன் பேருந்துகள் விரைவில் இயக்கப்பட உள்ளன. எந்தெந்த வழித்தடங்களில் இது போன்ற பேருந்துகளை இயக்குவது என்பது குறித்து விரிவான களஆய்வு மேற்கொள்ள சிறப்புக்குழு 10 நாள்களில் சென்னை வர உள்ளது. அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இவற்றின் இயக்கம் குறித்து முடிவு செய்யப்படும்.
மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்தபோது, மின்கலன் பேருந்துகள் 200 வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். முதற்கட்டமாக 70 மின்கலன் பேருந்துகள் வாங்குவதற்கான கருத்துரு அனுப்பட்டுள்ளது. ஒரு பேருந்தின் விலை ரூ. 2 கோடியில் இருந்து ரூ.1.5 கோடியாக குறைந்துள்ளது. மேலும் அதன் விலை குறைய வாய்ப்புள்ளது என்றார் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com