அருப்புக்கோட்டை தனியார் நிறுவனத்தில் 4 -ஆவது நாளாக வருமான வரி சோதனை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையிலுள்ள சாலைப்பணி ஒப்பந்த நிறுவனமான எஸ்பிகே அன்கோ அலுவலகம் மற்றும் நிறுவனர்களின் வீடுகளில் நான்காவது நாளாக

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையிலுள்ள சாலைப்பணி ஒப்பந்த நிறுவனமான எஸ்பிகே அன்கோ அலுவலகம் மற்றும் நிறுவனர்களின் வீடுகளில் நான்காவது நாளாக வியாழக்கிழமையும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர்.
அருப்புக்கோட்டையில் எஸ்பிகே அன்கோ எனும் சாலைப்பணி ஒப்பந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இந்நிறுவனம் தமிழ்நாட்டில் மேற்கொண்ட பல்வேறு சாலைப்பணிகளில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, வருமானவரித்துறையினர் கடந்த திங்கள்கிழமை முதல் அந்நிறுவனத்தின் அருப்புக்கோட்டை தலைமை அலுவலகத்திலும், நிறுவனர்களின் வீடுகளிலும் சோதனை மேற்கொண்டனர். மேலும் தமிழகத்தில் சென்னை, கமுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள இதன் கிளை அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
இச்சோதனைகளின்போது கைப்பற்றப்பட்ட வங்கி ஆவணங்களைக் கொண்டு அதன் நிறுவனர்களில் இரு சகோதரர்களான கருப்பசாமி, பாலசுப்பிரமணி ஆகியோரையும் உடன் அழைத்துச் சென்று அருப்புக்கோட்டையிலுள்ள வங்கிகளில் வருமானவரித் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது நாள்களில் நிறுவனத்திற்குச் சொந்தமான கல்குவாரிகள், பஞ்சாலை ஆகியவற்றில் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆணங்களைக் கொண்டு எஸ்பிகே நிறுவனர்களிடம் விசாரணை மேற்கொள்ளப் பட்டது.
தொடர்ந்து நான்காவது நாளாக வியாழக்கிழமை எஸ்பிகே நிறுவனத்தின் அலுவலக மேலாளர் மற்றும் பணியாளர்கள் ஆகியோரிடம் வருமானவரித் துறையினர் பல்வேறு வகையான கேள்விகளை எழுப்பி விசாரணை மேற்கொண்டனர். இதில் அதன் பணியாளர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியே அழைத்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. வியாழக்கிழமை காலை தொடங்கிய இவ்விசாரணை மாலை வரை தொடர்ந்தது. 
இதனிடையே, இந்நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான நாகராஜன் சென்னையில் இருந்து வியாழக்கிழமை இரவு வரவழைக்கப்பட்டு அவரது இல்லத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com