ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் நிதிநிலை அறிக்கை மசோதா நிறைவேறாமல் புதுவை பேரவை ஒத்திவைப்பு

புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி ஒப்புதல் அளிக்காததால், நிதிநிலை அறிக்கை மசோதா நிறைவேற்றப்படாமல் சட்டப்பேரவை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி ஒப்புதல் அளிக்காததால், நிதிநிலை அறிக்கை மசோதா நிறைவேற்றப்படாமல் சட்டப்பேரவை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
2018 - 19-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும் நோக்கில் கடந்த ஜூன் 4 ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டப்பட்டது. அப்போது, மத்திய அரசு நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்காததால் பேரவைக் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், முதல்வர் நாராயணசாமி மத்திய அரசிடம் போராடி அனுமதி பெற்று வந்தார்.
இதைத் தொடர்ந்து, ஜூலை 2 ஆம் தேதி நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடர் தொடங்கியது. முதல் நாள் முதல்வர் நாராயணசாமி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். தொடர்ந்து, நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம் நடைபெற்று வந்தது.
இந்த முறை ஜூலை 27-ஆம் தேதி வரை சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் என்று பேரவை அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு செல்லும் என்ற உத்தரவுக்கு நாங்கள் தடையேதும் விதிக்கவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, நியமன எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைக்குள் செல்லலாம் என துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, கடந்த 16-ஆம் தேதி புதுவை சட்டப்பேரவைக்கு வந்த நியமன எம்.எல்.ஏ.க்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும், புதுவைக்கு மாநிலத் தகுதியை வழங்க வலியுறுத்தி, தில்லிக்கு அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.க்களையும் அழைத்துச் செல்லும் வகையில் முன்கூட்டியே பேரவைக் கூட்டத் தொடரை முடிக்கத் திட்டமிடப்பட்டது.
அதன்படி, வியாழக்கிழமை புதுவை சட்டப்பேரவையில் அரசு தீர்மானங்களுக்குப் பின்னர் நிதிநிலை அறிக்கை மசோதா நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. ஆனால், துணைநிலை ஆளுநர் கிரண் பேடி நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
எனவே, தனி நபர் தீர்மானங்கள் நிறைவடைந்தவுடன் சட்டப்பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கம் நிதிநிலை அறிக்கை மசோதாவுக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் தராத நிலையில், பேரவையைக் காலவரையின்றி ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுவையைப் பொருத்தவரை நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடர் நிறைவடைவதற்குள் துணைநிலை ஆளுநரிடம் அதற்கு ஒப்புதல் பெற வேண்டும். ஆனால், நிதிநிலை அறிக்கைக்கு அவர் ஒப்புதல் தரவில்லை. எனவே, 2018-19 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை மசோதா பேரவையில் நிறைவேற்றப்படவில்லை. ஒப்புதல் பெற்ற பிறகு மீண்டும் பேரவையைக் கூட்டி நிதிநிலை அறிக்கை மசோதா நிறைவேற்றப்படும்.
நிதிநிலை அறிக்கை மசோதா நிறைவேறினால்தான் அடுத்த மாதம் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கிடைக்கும் என்றார் வைத்திலிங்கம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com