சென்னை கந்தன்சாவடி கட்டட விபத்து: பொறியாளர்களிடம் போலீஸார் விசாரணை 

சென்னை கந்தன்சாவடி தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கந்தன்சாவடி கட்டட விபத்து: பொறியாளர்களிடம் போலீஸார் விசாரணை 

சென்னை கந்தன்சாவடி தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை கந்தன்சாவடி எம்.ஜி.ஆர். சாலையில் 8 தளங்களுடன் கூடிய தனியார் மருத்துவமனை கட்டடத்தில் 4 தளங்கள் கட்டப்பட்ட நிலையில் சனிக்கிழமை இரவு விபத்து ஏற்பட்டது. இப்பணியில் பிகார், ஒடிஸா மாநிலங்களைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்தக் கட்டடத்தின் அருகிலேயே ஜெனரேட்டர் வைப்பதற்கு 9 அடி உயரத்தில் அண்மையில் இரும்பு மேடை அமைக்கப்பட்டது. இந்த மேடை இரும்பு தூணில் இருந்தது. இந்த மேடையின் மேல்பகுதியில் கூரை அமைக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. 

பலவீனமாக இருந்த அந்த மேடையின் இரும்புத் தூண்கள் சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் திடீரென சரிந்து, அருகே இருந்த 4 மாடி கட்டடத்தின் இரும்பு சாரத்தின் மீது விழுந்தது. இதில் ஜெனரேட்டரும் இரும்பு சாரத்தின் மீது விழுந்ததால், சாரம் பயங்கர சத்தத்துடன் கீழே விழுந்தது. இதனால், தரைத்தளத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் இரும்பு சாரத்தில் சிக்கி பலத்த காயமடைந்தனர்.

இடிபாடுகளில் சிக்கியவர்களை  திருவான்மியூர், துரைப்பாக்கம், கிண்டி ஆளுநர் மாளிகை ஆகிய 3 இடங்களைச் சேர்ந்த தீயணைப்புப் படை வீரர்கள்,  தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து 3 மோப்ப நாய்கள் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

விபத்து குறித்து தகவலறிந்ததும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, சென்னை பெருநகர காவல்துறையின் இணை ஆணையர் மகேஸ்வரி, துணை ஆணையர் ஷெஷாங்சாய் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மீட்புப் பணியை துரிதப்படுத்தினர். 

இச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் காயமடைந்த 28 பேர் பெருங்குடி தனியார் மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், கட்டுமான நிறுவனத்தின் மீது அஜாக்கிரதையாக இருந்து மரணம் விளைவித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த கட்டட பொறியாளர்கள் முருகேசன், சிலம்பரசன் ஆகியோரிடம் தரமணி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com