நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்காதது ஏன்: அதிமுக விளக்கம்

மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்காதது ஏன் என்பது குறித்து அதிமுக விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக, அமைச்சர் டி.ஜெயக்குமாரும்,

மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்காதது ஏன் என்பது குறித்து அதிமுக விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக, அமைச்சர் டி.ஜெயக்குமாரும், மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரையும் செய்தியாளர்களை சனிக்கிழமை தனித்தனியே சந்தித்தனர். அவர்கள் கூறியது:-
 டி.ஜெயக்குமார்: மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியிலேயே மாநிலத்தின் உரிமைகளுக்காக போராடி அவற்றை பெற்றுத் தருகிறோம். மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாக்கும் விஷயத்தில் அதிமுக முழு மூச்சுடன் பாடுபட்டு வருகிறது.
 நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக அதிமுக வாக்களிக்கவில்லை. காவிரிப் பிரச்னையில் தெலுங்கு தேசம் நமக்கு ஆதரவு அளிக்கவில்லையே. எனவே எந்தப் பிரச்னைகளில் ஆதரிக்க வேண்டுமோ அதனை ஆதரிப்போம். எவற்றை எதிர்க்க வேண்டுமோ அவற்றை எதிர்ப்போம் என்றார்.
 மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை: காவிரிப் பிரச்னையின் போது மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நாங்கள் கொண்டு வர முயற்சித்தோம். காவிரிப் பிரச்னைக்காக 23 நாள்கள் நாடாளுமன்றத்தை முடக்கி, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரத் தயாரானோம். அதற்கு காங்கிரஸ் ஆதரிக்கவில்லை. அப்போது அவர்கள் முன்வரவில்லை. திமுக-காங்கிரஸ் கூட்டணியாக உள்ளது. காவிரிப் பிரச்னையில் அதிமுகவுக்கு எந்தப் பெருமையும் வந்து விடக் கூடாது என்பதற்காகவே அப்போது தீர்மானம் கொண்டு வர ஆதரிக்கவில்லை.
 மேலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசானது தனது ஆட்சிக் காலம் முழுவதையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு. வருமான வரித் துறை சோதனைகளுக்கு அதிமுக அஞ்சாது. மடியில் கணம் இருந்தால்தானே வழியில் பயம் இருக்கும். எங்கள் மடியில் கணம் இல்லை என ஏற்கெனவே முதல்வரும், துணை முதல்வரும் கூறியுள்ளனர்.
 மக்களவைத் தேர்தலில் கூட்டணி தேவையா, தேவையில்லையா என்பதை தலைமைக் கழக நிர்வாகிகள் முடிவு செய்வர். அதிமுகவுக்கு இரட்டை இலை என்ற சின்னத்தின் பிரபலமே போதுமானது. அண்ணாவின் பெயரைக் கொண்ட கட்சியை எந்த தேசியக் கட்சியாலும் அழித்து விட முடியாது என்றார் தம்பிதுரை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com