புதுவை முதல்வர் தில்லியில் முகாம்

புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களின் சந்திப்புக்கான அனுமதியைப் பெறுவதற்காக

புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களின் சந்திப்புக்கான அனுமதியைப் பெறுவதற்காக புதுவை முதல்வர் வே.நாராயணசாமி தில்லியில் முகாமிட்டுள்ளார்.
 புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவது தொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மான நகலுடன் முதல்வர் நாராயணசாமி தலைமையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் மக்களவை, மாநிலங்களவை அனைத்துக் கட்சிக் குழுத் தலைவர்களை ஜூலை 23 -ஆம் முதல் 25-ஆம் தேதி வரை சந்திக்க ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டது.
 அதன்படி, முதல்வர் நாராயணசாமி வெள்ளிக்கிழமை காலை தில்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்.
 அங்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்களின் சந்திப்புக்காக அனுமதி பெறும் முயற்சியில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். மேலும், சனிக்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலும் பங்கேற்றார்.
 புதுவை முதல்வர் தில்லியில் முகாமிட்டுள்ள நிலையில், புதுச்சேரியில் இருந்து அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.க்களும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 22) தில்லி செல்ல உள்ளனர். அவர்களுடன் சேர்ந்து, பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் உள்ளிட்ட தலைவர்களை திங்கள்கிழமை சந்தித்து மாநில அதிகாரம் தொடர்பாக வலியுறுத்த முதல்வர் நாராயணசாமி முடிவு செய்துள்ளார்.
 எனினும், திங்கள்கிழமை (ஜூலை 23) முதல் பிரதமர் நரேந்திர மோடி ஆப்பிரிக்க நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், புதுவை முதல்வர் தலைமையிலான அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.க்களை சந்திப்பதற்கு இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.
 இதனிடையே, தில்லி சென்றுள்ள முதல்வர் நாராயணசாமி, சுற்றுலாத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் ஆகியோர் இந்திய விமான நிலைய ஆணையத் தலைவர் குருபிரசாத் மகாபாத்ராவை வெள்ளிக்கிழமை சந்தித்து, புதுச்சேரியில் விமான நிலைய விரிவாக்கம், புதிதாக விமான சேவைகள் தொடங்குவது குறித்து வலியுறுத்தினர்.
 அனைத்துக் கட்சிக் குழுத் தலைவர்களையும் சந்தித்துவிட்டு, புதுவை முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஜூலை 25-ஆம் தேதி புதுச்சேரிக்குத் திரும்பத் திட்டமிட்டுள்ளனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com