வெளிநாடுகளில் சொத்து வாங்கிய வழக்கு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் ஆக.20-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு 

வெளிநாடுகளில் சொத்து வாங்கிய வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தினர் நேரில் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வெளிநாடுகளில் சொத்து வாங்கிய வழக்கு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் ஆக.20-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு 

சென்னை: வெளிநாடுகளில் சொத்து வாங்கிய வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தினர் ஆகஸ்ட் 20-ஆம் தேதி நேரில் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் வாங்கிய சொத்து விவரங்களை அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக் கணக்கில் காட்டவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 2015-இல் கொண்டு வரப்பட்ட சட்டத்தின் கீழ் இங்கிலாந்தில் ரூ.5.37 கோடி மற்றும் ரூ.80 லட்சம் மதிப்பிலான இரண்டு சொத்துகள், அமெரிக்காவில் ரூ.3.28 கோடி மதிப்பிலான சொத்து வாங்கியது தொடர்பாக விளக்கம் கேட்டு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியது. 

இந்த நிலையில் கருப்பு பண சட்டத்தின் கீழ் நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக வருமான வரித்துறை எழும்பூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தது. இந்தப் புகார் மனுவை சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர்விழி விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார். இதைதொடர்ந்து, அவர் முன், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நளினி சிதம்பரம் உள்ளிட்ட 3 பேரும் கடந்த ஜூன் 25-ஆம் தேதி நேரில் ஆஜராகினார். வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்கு தொடர்பாக 3 பேரையும் ஜூலை 23-ஆம் தேதி ஆஜராக உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி மலர்விழி முன் ஜூலை 23 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ப.சிதம்பரம் குடும்பத்தினர் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிபதி, வழக்கை வரும் ஜூலை 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, அன்றைய தினம் கார்த்தி சிதம்பரம், நளினி சிதம்பரம் மற்றும் ஸ்ரீநிதி ஆகியோர் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

அதன்படி திங்களன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த பொழுதும் அவர்கள் யாரும் ஆஜராகவில்லை. இதனையடுத்து வழக்கை  ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் கார்த்தி சிதம்பரம், நளினி சிதம்பரம் மற்றும் ஸ்ரீநிதி ஆகியோர் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com