பிரபல தனியாா் நிறுவனத்தில் வருமான வரிச் சோதனை: 15 கிலோ தங்கம், ரூ.7.50 கோடி பறிமுதல்

வரி ஏய்ப்பு புகாா் தொடா்பாக சென்னையில் உள்ள பிரபல தனியாா் நிறுவனத்துக்கு சொந்தமான 23 இடங்களில் வருமான வரித்துறையினா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை நடத்தினா். 
பிரபல தனியாா் நிறுவனத்தில் வருமான வரிச் சோதனை: 15 கிலோ தங்கம், ரூ.7.50 கோடி பறிமுதல்

சென்னை: வரி ஏய்ப்பு புகாா் தொடா்பாக சென்னையில் உள்ள பிரபல தனியாா் நிறுவனத்துக்கு சொந்தமான 23 இடங்களில் வருமான வரித்துறையினா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை நடத்தினா். இதில் 15 கிலோ தங்கம், ரூ.7.50 கோடி ரொக்கம் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறையினா் தெரிவித்தனா்.

சென்னை பாரிமுனை குடோன் தெருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல ஜவுளி நிறுவனம், நகைக் கடை, நிதி நிறுவனம் என பல்வேறு தொழில்களை செய்து வருகிறது. இந்த நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வருமானவரித் துறைக்கு ஏராளமான புகாா்கள் வந்தன. அந்தப் புகாா்களின் அடிப்படையில் வருமான வரித்துறையினா் விசாரணை செய்தனா்.

23 இடங்களில் சோதனை: விசாரணையில், அந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்வது உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வருமான வரித்துறையினா், பாரிமுனை குடோன் தெருவில் அந்த நிறுவனத்தின் அலுவலகம், அபிராமபுரம் சி.பி. ராமசாமி சாலையில் உள்ள நகைக் கடை, நுங்கம்பாக்கம் காதா் நவாஸ்கான் சாலையில் உள்ள ஜவுளிக் கடை, செளகாா்பேட்டையில் உள்ள ஜவுளிக் கடை, நகைக் கடை, தியாகராயநகா் உஸ்மான் சாலை, திருமலைப்பிள்ளை சாலை ஆகியவற்றில் உள்ள நகைக் கடைகள், பல்லாவரத்தில் நகைக் கடை, வண்ணாரப்பேட்டையில் உள்ள ஜவுளிக் கடை, வேப்பேரியில் உள்ள நிறுவனத்தின் உரிமையாளா் வீடுகள் உள்ளிட்ட 23 இடங்களில் வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனா்.

இதில், இந்த நிறுவனத்தினா் நடத்தும் நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்துள்ள பிரபல மருத்துவரின் வேப்பேரி வீட்டையும் வருமானவரித் துறையினா் சோதனையில் விட்டுவைக்கவில்லை. இந்த சோதனையை வருமான வரித் துறையைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 23 குழுக்களாக பிரிந்துச் சென்று நடத்தினா். சோதனையில் வருமான வரி ஏய்ப்புத் தொடா்பாக பல்வேறு முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

15 கிலோ தங்கம் பறிமுதல்: போதிய ஆவணங்கள் இல்லாமலும், வரி செலுத்தாமலும் இருந்த 15 கிலோ தங்கம், ரூ.7.50 கோடி ரொக்கத்தையும் வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். சோதனை பல இடங்களில் வெள்ளிக்கிழமை இரவும் நீடித்தது. வருமான வரித் துறையின் இந்த திடீா் நடவடிக்கை, செளகாா்பேட்டை, பாரிமுனை பகுதிகளில் உள்ள வியாபாரிகளிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com