தொடர்ந்து ஏழாம் ஆண்டாகத் தள்ளிப்போகும் மேட்டூர் அணைத் திறப்பு

நீர் இருப்பு மற்றும் தண்ணீர் வரத்து குறைவுக் காரணமாக மேட்டூர் அணைத் திறப்புத் தொடர்ந்து ஏழாம் ஆண்டாகத் தள்ளிப் போகிறது.
வெள்ளிக்கிழமை நீர்மட்டம் 39.42 அடியாக இருந்த நிலையில், மேட்டூர் அணையின் தோற்றம்.
வெள்ளிக்கிழமை நீர்மட்டம் 39.42 அடியாக இருந்த நிலையில், மேட்டூர் அணையின் தோற்றம்.

நீர் இருப்பு மற்றும் தண்ணீர் வரத்து குறைவுக் காரணமாக மேட்டூர் அணைத் திறப்புத் தொடர்ந்து ஏழாம் ஆண்டாகத் தள்ளிப் போகிறது.
டெல்டா மாவட்டங்களின் குறுவை பருவ நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட வேண்டும். ஆனால், இந்த அணைக் கட்டப்பட்ட 1934 ஆம் ஆண்டு முதல் இதுவரை 25 முறை மட்டுமே ஜூன் 12-ம் தேதியிலும், அதற்கு முன்பும் திறக்கப்பட்டது. கடந்த 84 ஆண்டுகளில் இப்போது 59-வது முறையாக மேட்டூர் அணைத் திறப்புத் தள்ளிப் போகிறது. மேட்டூர் அணையில் குறைவான நீர் இருப்பு உள்ளதாலும், வரத்து மிகக் குறைவான அளவில் இருப்பதாலும் தொடர்ந்து ஏழாம் ஆண்டாகக் குறுவை சாகுபடிக்குத் திறக்க முடியாத நிலை தொடர்கிறது.
எனவே, குறுவை சாகுபடியின் இயல்பான பரப்பளவு 1.10 லட்சம் ஹெக்டேராக இருந்தாலும், 7 ஆண்டுகளாக இந்த இலக்கை எட்ட முடிவதில்லை. குறுவை சாகுபடி மேற்கொள்வதற்குக் குறைந்தது 75 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். ஆனால், மேட்டூர் அணையில் வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி நீர் இருப்பு 11.83 டி.எம்.சி. மட்டுமே உள்ளது. மொத்தம் 120 அடி உயரம் கொண்ட இந்த அணையில் இப்போது 39.50 அடி உயரத்தில் மட்டும்தான் தண்ணீர் இருக்கிறது. அணைக்கு 2,027 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதை வைத்து குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் திறக்க முடியாத நிலை உள்ளதால், மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்க இயலாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மூத்த வேளாண் வல்லுநர் பி. கலைவாணன் தெரிவித்தது: குறுவைப் பருவத்தைப் பொருத்தவரை ஜூன் 20-ம் தேதிக்குள் மேட்டூர் அணையைத் திறந்தால்தான் சாகுபடிக்குச் சாத்தியமாக இருக்கும். அதன் பிறகு அணையைத் திறந்தால் அறுவடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு, பயிர்கள் காய்ந்துவிடும். இப்போதைய நிலைமையில் ஜூன் 20-ம் தேதிக்குள் அணையைத் திறப்பதற்கு வாய்ப்பு இல்லை. எனவே, நேரடியாக சம்பா சாகுபடிக்கு அணையைத் திறந்தால் ஒரு போக சாகுபடியையாவது முழுமையாகச் செய்து காப்பாற்றலாம். அதற்கு ஆக. 15-ம் தேதிக்கு பிறகு மேட்டூர் அணையைத் திறக்க வேண்டும் என்றார் கலைவாணன்.
காவிரி நீர் அவசியம்: ஆழ்குழாய் மோட்டார் வசதி உள்ள விவசாயிகள் முன்பட்ட குறுவை சாகுபடியைத் தொடங்கி மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 16,000 ஹெக்டேரில் நடவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல, திருவாரூர் மாவட்டத்தில் 4,260 ஹெக்டேரிலும் நடவுப் பணி முடிவடைந்துள்ளது.
நாகை உள்பட மூன்று மாவட்டங்களிலும் மொத்தத்தில் 93,000 ஹெக்டேரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், காவிரியில் முறையாகத் தண்ணீர் வந்தால் மட்டுமே நிலத்தடி நீர் மீட்சிப் பெறும். ஆற்றுநீர் ஆகஸ்ட் மாதம் வரை பெறப்படவில்லை என்றால் வடிமுனைக் குழாய் கிணறுகள் வற்றிப் போகும். நிலத்தடி நீர் மட்டம் மிகுந்த ஆழத்துக்குச் செல்லும்போது உவர் நீர் வந்து பயிர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, ஆழ்குழாய் மோட்டார் பம்ப்செட் மூலம் மேற்கொள்ளப்படும் குறுவை சாகுபடிக்கும் காவிரி நீர் அவசியம் தேவைப்படுகிறது என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
விவசாயிகள் ஏமாற்றம்: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உச்ச நீதிமன்றம் பிப்ரவரி மாதத்தில் ஆணையிட்டது. என்றாலும், கால தாமதமாக காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என்ற பெயரில் மே மாதத்தில் அமைக்கப்பட்டது. இதன் மூலம், நிகழ் குறுவை பருவத்துக்குத் தண்ணீர் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால், ஆணையம் அமைக்கப்பட்டும் குறுவைப் பருவத்துக்குத் தண்ணீர் கிடைக்காதது விவசாயிகளுக்கு ஏமாற்றமே.
கர்நாடக அணைகளில் நீர்மட்டம் குறைவு?: கர்நாடகத்தில் உள்ள அணைகளில் நீர் மட்டமும், தண்ணீர் வரத்தும் குறைவாகவே இருப்பதாகக் கூறப்படுகிறது. கர்நாடக மாநில இயற்கைப் பேரிடர் கண்காணிப்பு மைய இணையதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலில் அம்மாநில அணைகளில் புதன்கிழமை நிலவரப்படி நீர் இருப்பு விவரம்:
நமக்கு நேரடியாகத் தண்ணீர் கிடைக்கக்கூடிய கபிணி அணையின் உயரம் கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி. இதில், இப்போதைய நீர் மட்டம் 2,259 அடி. அதாவது 25 அடி குறைவாக இருக்கிறது. இந்த அணைக்கு நீர் வரத்து 1,017 டி.எம்.சி. ஆக உள்ளது.
இதேபோல, கடல் மட்டத்தில் இருந்து 2,859 அடி உயரம் கொண்ட ஹேரங்கி அணையின் இப்போதைய நீர்மட்டம் 2,788 அடி. அதாவது 71 அடி குறைவு. நீர் வரத்து வினாடிக்கு 295 கன அடி வீதம்.
ஹேமாவதி அணையின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 2,922 அடி. ஆனால், 52 அடி குறைவான நிலையில் இப்போதைய நீர்மட்டம் 2,870 அடி. நீர் வரத்து 136 கன அடி வீதம்.
கிருஷ்ணராஜ சாகர் அணையில் நிலத்தில் இருந்து 124.80 அடி உயரம். இதில், இப்போது 77.25 அடி உயரத்தில் தண்ணீர் இருக்கிறது. 47.55 அடி குறைவு. நீர் வரத்து 1,521 கன அடி வீதம்.
ஏரிகளில் தண்ணீர் நிரப்புவதால்.... கர்நாடகத்தில் அணைகளில் தண்ணீரை தேக்கி வைப்பதற்குப் பதிலாக ஏரிகளில் நிரப்பும் வழக்கம் தொடர்வதால் உண்மை நிலை தெரிய வருவதில்லை என விவசாயிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கச் செயலர் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தெரிவித்தது:
கர்நாடகத்தில் அணைகளில் தண்ணீரைத் தேக்குவதற்குப் பதிலாக ஏரிகளில் தேக்கி வைத்து வருகின்றனர். இதனால், அணைகளில் எப்போதும் நீர்மட்டம் குறைவாகவே காட்டப்படுகிறது. ஆனால், இது உண்மை அல்ல. எனவே, வான் வழியில் கேமரா மூலம் ஏரி, குளங்களில் உள்ள நீர் இருப்பையும் கணக்கிட வேண்டும் என்றார் விமல்நாதன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com