பில்லூர் அணைக்குத் தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு

பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதையடுத்து 2-ஆவது நாளாக
தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால், பில்லூர் அணையில் 2-வது நாளாக மதகுகள் வழியே தண்ணீர் வெளியேற்றப்படுகிறது
தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால், பில்லூர் அணையில் 2-வது நாளாக மதகுகள் வழியே தண்ணீர் வெளியேற்றப்படுகிறது

பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதையடுத்து 2-ஆவது நாளாக திங்கள்கிழமையும் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. 
கோவை மாவட்டம், காரமடை அருகே உள்ள பில்லூர் அணையிலிருந்து வெளியேறும் பவானி ஆற்று நீரை ஆதாரமாகக் கொண்டு மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதிகளில் 16-க்கும் மேற்பட்ட குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 
கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டப் பகுதிகளைச் சேர்ந்த 30 லட்சம் மக்களின் குடிநீர், பாசனத் தேவைகளையும் இந்த ஆறு பூர்த்தி செய்கிறது. தென் மேற்குப் பருவ மழை தீவிரமடைந்ததையடுத்து, கடந்த ஒருவாரமாக நீலகிரி மாவட்டம் உள்பட அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. 
இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 97 அடியாக உயர்ந்ததையடுத்து பாதுகாப்பு கருதி ஞாயிற்றுக்கிழமை மதியம், அணையின் நான்கு மதகுகளும் திறக்கப்பட்டு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறியதைத் தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. 
பருவ மழை காரணமாக பில்லூர் பகுதியைச் சுற்றிலும் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக அணைக்குத் திங்கள்கிழமை விநாடிக்கு 16,000 கனஅடி தண்ணீர் வந்தது.
அணையிலிருந்து அதே அளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அணையின் பாதுகாப்பு கருதி தொடர்ந்து 2-ஆவது நாளாக அணையின் நான்கு மதகுகளும் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டது. 
இதனால் மேட்டுப்பாளையம், பவானி ஆற்றில் தொடர்ந்து 2-ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் புனிதா உத்தரவின் பேரில், ஆற்றில் நீர்வரத்து குறித்து வருவாய்த் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

அணையின் மதகுகள் திறக்கப்பட்டதால் பவானி ஆற்றின் இருபுறமும் கரையை தொட்டபடி செல்லும் வெள்ளம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com