எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: இரண்டு நீதிபதிகளின் தீர்ப்பும், விளக்கங்களும்

டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட 18 எம்எல்ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை அளித்ததால் 3வது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டது.
எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: இரண்டு நீதிபதிகளின் தீர்ப்பும், விளக்கங்களும்


சென்னை: டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட 18 எம்எல்ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை அளித்ததால் 3வது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டது.

தினகரன் ஆதரவாளர்கள் 18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும், 18 தொகுதிகளிலும் தேர்தலை நடத்தலாம் என்றும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பளித்தார். 

அதே சமயம், 18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று மற்றொரு நீதிபதி சுந்தர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பினை வழங்கியதால், வழக்கு 3வது நீதிபதிக்கு மாற்றப்படுவது வழக்கம்.

அந்த வகையில், இரண்டு நீதிபதிகளும்  இருவேறு தீர்ப்பினை அளித்ததால், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்படுவதாகவும், 18 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட இடைக்கால உத்தரவு நீடிக்கும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அளித்த தீர்ப்பில், சட்டவிதிகளுக்கு புறம்பாக செயல்பட்டால் மட்டுமே நீதிமன்றம் தலையிடும். சபாநாயகர் இப்படித்தான் செயல்பட வேண்டும் என்று நிர்பந்திப்பது நீதிமன்றத்தின் பணி அல்ல. இந்த வழக்கைப் பொறுத்தவரை சபாநாயகரின் அதிகாரத்தில் மிகக் குறைந்த அளவே தலையிட வாய்ப்பு உள்ளது. 

சரியான காரணங்கள் இல்லாமல் சபாநாயகரின் தீர்ப்பில் தலையிட முடியாது. அந்த வழக்கில் சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிடும் வாய்ப்புக் குறைவாகவே உள்ளது. இயற்கை நியதி மீறப்பட்டால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும். அதிகாரத்தை மீறினாலோ சட்டத்துக்கு முரணாக செயல்பட்டாலோ நீதிமன்றம் தலையிடலாம். ஆனால், சபாநாயகரின் உத்தரவில் எந்த தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, சபாநாயகரின் உத்தரவில் நான் தலையிட விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தனது தீர்ப்பு குறித்து விளக்கம் அளித்திருந்தார்.

நீதிபதி சுந்தர் அளித்த தீர்ப்பின் முழு விவரம் இது.

ஆளுநரிடம் மனு கொடுப்பது கட்சித் தாவல் என்று எடுத்துக் கொள்ள முடியாது. ஆளுநரிடம் மனு அளித்ததால் மட்டுமே எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது. சபாநாயகரின் செயலில் உள்நோக்கம் உள்ளதால் நீதிமன்றம் தலையிடலாம் என்று நினைக்கிறேன். 

எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்புக்கு, கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா வழக்கை கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.

ஜக்கையன் என்ற எம்எல்ஏவுக்கு மட்டும் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. ஜக்கையன் தகுதி நீக்கம் செய்யப்படாததால் சபாநாயகரின் முடிவில் உள்நோக்கம் உள்ளது தெரிகிறது. சபாநாயகரின் அதிகாரம் மக்களின் நம்பிக்கையை பெறுவதற்காகத்தானே தவிர, மக்களின் நம்பிக்கையை குழைப்பதற்காக அல்ல என்று நீதிபதி சுந்தர் காட்டமாகவேக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com