காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள காலா' படத்துக்கு திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க,

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள காலா' படத்துக்கு திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, சென்னை செம்பியத்தைச் சேர்ந்த தேவராஜன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்துக்கு திரையரங்குகளில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலித்திருந்தால் அந்தக் கட்டணத்தை திருப்பி வழங்க உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எம்.தண்டபாணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர், இத்திரைப்படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், காலா படத்துக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிமீறலில் ஈடுபடும் திரையரங்குகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்கள் சட்டத்தை அமல்படுத்தும் அமைப்புகள் மீதான நம்பிக்கைகளை இழந்துவிடுவர். 
சில திரையரங்குகள் படத்துக்கு வசூலிக்கும் கட்டணத்தைவிட வாகனங்களை நிறுத்த கூடுதல் கட்டணங்களை வசூலிக்கின்றன. 
படம் பார்க்க திரையரங்குகளுக்கு வரும் பொதுமக்களின் வாகனங்களைப் பாதுகாப்பாக நிறுத்தும் வசதியை செய்துதர வேண்டிய திரையரங்குகள் சட்டவிரோத வசூலில் ஈடுபடுகின்றன. எனவே, இதுகுறித்தும் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் 25 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com