மகப்பேறு பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருள்கள் வழங்கப்படுவது ஏன்?: அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருள்கள் ஏன் வழங்கப்படுகின்றன என்பது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்தார்.
மகப்பேறு பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருள்கள் வழங்கப்படுவது ஏன்?: அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருள்கள் ஏன் வழங்கப்படுகின்றன என்பது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்தார்.
சட்டப்பேரவையில் சுகாதாரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் மாசிலாமணி கூறியது: டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தை கொண்டு வந்தவர் கருணாநிதி. இந்தத் திட்டத்தில் ரூ.12,000-மாக வழங்கப்பட்ட நிதியை மேலும் ரூ.6,000 உயர்த்தி ரூ.18,000-மாக அதிமுக அரசுதான் வழங்கியது. இந்த அறிவிப்பு வெளியிட்டு ஓராண்டுக்குப் பிறகே அதை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளீர்கள். அதுவும் இந்த திட்டத்துக்கான நிதியை 5 தவணைகளில் தருவதாகக் கூறி குழந்தைக்கு தடுப்பூசி போடும் காலம் வரை, அதாவது 2 ஆண்டு காலத்துக்கு வழங்குகிறீர்கள். இது சரியா? 
மேலும், ஊட்டச்சத்து பெட்டகம் என்ற பெயரில் பேரீச்சம்பழம், நெய் உள்ளிட்ட பொருள்களைத் தருகிறீர்கள். ஓர் ஆண்டுக்கு 6 லட்சம் பயனாளிகள் என்றால், அவர்களுக்கான ஊட்டச்சத்து பொருள்களை எப்படி வழங்குவீர்கள். ஓர் ஆண்டுக்கு ஒரு முறை பொருள்களை வாங்கிக் கொடுக்கிறீர்கள் என்றால் நெய் போன்ற உணவுப் பொருள்கள் வீணாகிவிடும். அவ்வப்போது அரசு வாங்கிக் கொடுப்பது இல்லை.
மேலும், மத்திய அரசு ஒரு மகப்பேறு திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. அந்தத் திட்டத்தின் பெயர் பிரதம மந்திரி ஜனனி சுரக் ஷா யோஜனா. இதில் திட்டத்தின் கீழ் மகப்பேறு பெண்களுக்கு ரூ.5,000 நிதி அளிக்கப்படுகிறது. இந்தத் தொகையில் 60 சதவீத நிதியை மாநில அரசும், 40 சதவீத நிதியை மத்திய அரசும் அளிக்கிறது. ஆனால், முதலில் மத்திய அரசின் திட்டத்தின் பெயரைப் போட்டுவிட்டு, இரண்டாவதாக மாநில அரசின் திட்டப் பெயர் போடப்படுகிறது.
முத்துலெட்சுமி ரெட்டியின் பெயர் என்பது வெறும் பெயர் அல்ல. திராவிட இயக்கத்தின் வரலாறு அந்தப் பெயர். மாநில அரசின் உரிமையை விட்டுக் கொடுப்பதுபோல திட்டத்தின் பெயரை விட்டுக் கொடுத்துள்ளீர்கள் என்றார்.
அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் குறுக்கிட்டு கூறியது: முத்துலட்சுமி ரெட்டியின் பெருமையை நிச்சயம் விட்டுக் கொடுக்கமாட்டோம். அவரின் பெருமை தெரிந்ததால்தான் புதுக்கோட்டையில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு அவரின் பெயரை வைத்தோம். புதுக்கோட்டையில் முத்துலட்சுமி பிறந்தவர் என்பது எங்களுக்குப் பெருமை.
குறைத்துப் பேச வேண்டாம்: கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் திட்டத்தைக் குறைத்துப் பேச வேண்டாம். கர்ப்பிணிப் பெண்களுக்கு இருக்கும் ரத்த சோகை குறைப்பாட்டை போக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. மகப்பேறு நிதி அளிக்கும்போது அதை குழந்தைகளுக்கு கொலுசு வாங்குவது போன்றவற்றுக்காக பெண்கள் சேர்த்து வைத்துக் கொள்கின்றனர். இதைக் கருத்தில் கொண்டுதான் கர்ப்பிணிப் பெண்களின் ரத்த சோகையைப் போக்க வேண்டும் என்பதற்காக பேரீச்சம்பழம், நெய் போன்ற ஊட்டச்சத்து பொருள்கள் வழங்கப்படுகின்றன என்றார் அமைச்சர்
விஜயபாஸ்கர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com