அடுத்த போராட்டக் களம்?: மாசடைந்த நகரங்கள் பட்டியலில் ராணிப்பேட்டை

உலக அளவில் உச்சபட்ச மாசடைந்த தொழில் நகரங்கள் பட்டியலில் உள்ள ராணிப்பேட்டை, மக்கள் வாழத் தகுதியற்ற நகரமாக மாறி வருகிறது.
அடுத்த போராட்டக் களம்?: மாசடைந்த நகரங்கள் பட்டியலில் ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை: உலக அளவில் உச்சபட்ச மாசடைந்த தொழில் நகரங்கள் பட்டியலில் உள்ள ராணிப்பேட்டை, மக்கள் வாழத் தகுதியற்ற நகரமாக மாறி வருகிறது. இச்சூழலில் இருந்து நகரை மீட்டெடுக்க இளைஞர்கள், மாணவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமூக அமைப்பினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் தயாராகி வருகின்றனர். 
ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு தொழிற்சாலைகள் அவசியம் என்றபோதிலும், அந்தத் தொழிற்சாலைகள் சுற்றுச்சூழலை அழித்து, மக்களின் வாழ்வாதாரத்தைச் சீரழிக்கும் நோக்கில் செயல்படுவது சரியா என்ற கேள்வி எழுகிறது. உலகில் அதிகம் மாசடைந்த நகரங்கள் பட்டியலில் ராணிப்பேட்டை உள்ளது என்று அறிவியல், சுற்றுச்சூழல் மையம் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை நகரம் தொழிற்சாலைகளின் கழிவுகளால் மாசடைந்த நகரங்களின் வரிசையில் முன்னிலையில் உள்ளதாகவும் வேறு சில புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ராணிப்பேட்டை சுற்றுவட்டாரத்தை மிரட்டும் வகையில், நிலத்தடி நீரையும், சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தும் வகையில் குவிந்து கிடக்கும் 2.27 லட்சம் டன் அளவிலான குரோமியம் கழிவுகள் ரூ. 100 கோடி செலவில் 3 ஆண்டுகளுக்குள் பாதுகாப்பாக அகற்றப்படும் என்ற மத்திய, மாநில அரசுகளின் வாக்குறுதி என்ன ஆனது என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பொதுமக்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான பாலாற்று குடிநீர், விவசாயக் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளின் நீர் நஞ்சாகி, பயன்படுத்தத் தகுதியற்ற நீராக மாறியுள்ளது. ராணிப்பேட்டை சுற்றுவட்டாரத்தில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களிலும், 10-க்கும் மேற்பட்ட நீர்நிலைகளில் குரோமியம் கழிவுநீர் நேரடியாக கலந்து நஞ்சாக மாறிவிட்டதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்த குரோமியம் கழிவுகளால் ராணிப்பேட்டை மற்றும் சுற்று வட்டாரத்தில் நீர், நிலம், காற்று உள்ளிட்ட ஆதாரங்கள் மாசடைந்து, வாழ்வாதாரம் சீர்குலைந்து, மக்கள் நிரந்தர நோயாளிகளாக மாறி வருகின்றனர். இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாசடைந்த நிலத்தடி நீரை செறிவூட்டும் திட்டங்கள் செயல்படுத்த வேண்டும். மாசடைந்த நிலத்தை உயிரி வேதியியல் முறையில் மறுசீரமைப்பு செய்ய வேண்டும். 
அதேபோல், குரோமியம் கழிவுநீர் வெளியேறி சிப்காட்டை சுற்றியுள்ள நீர்நிலைகள், ஆழ்துளைக் கிணறுகள், திறந்தவெளிக் கிணறுகளில் நிலத்தடி நீருடன் கலக்கும் அளவைக் கண்காணிக்க சிப்காட் பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் நிரந்தர ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு, நீர் மாதிரி சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டது. இப்பணி நிறைவடைந்தவுடன் ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, நீரில் குரோமியம் கழிவின் அளவு கண்காணிக்கப்பட உள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் குரோமியம் கழிவுகளை அகற்றும் பணிக்காக மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கியும்கூட, இதுவரை எந்தப் பணியும் நடைபெறவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயன நச்சுப்புகையால் காற்று மாசடைந்து ராணிப்பேட்டை நகரைச் சுற்றி வசிக்கும் மக்களுக்கு நுரையீரல், இருதயம் சம்பந்தமான நோய்கள் அதிகம் இருப்பதும், பெண்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட தீரா நோய்கள் இருப்பதும் தற்போது தெரியவந்துள்ளது.
காற்றில் மாசு அளவைக் கண்காணிக்க தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை உள்ளி 25 இடங்களில் காற்றின் தரம் தொடர் கண்காணிப்பு மையம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதற்கான இடம் தேர்வு உள்ளிட்ட ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கான எவ்விதப் பணியையும் இதுவரை தொடங்காமல் உள்ளதாகக் கூறப்படுகிறது.
பொது மக்களின் அடுத்த கட்ட போராட்டம் ராணிப்பேட்டை சுற்று வட்டார மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கிவரும் பாலாற்றை மீட்பதாகும். இதுபோக, கல், ஏரி மண் உள்ளிட்ட கனிமவள கடத்தலைத் தடுத்து, முக்கிய நீர் ஆதாரங்களைப் பாதுகாத்து வாழ்வாதாரக் காரணிகளை அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைக்கும் நோக்கில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்கள் நெடுநாள் கோரிக்கையாக உள்ளது. இல்லையெனில் தொடர் போராட்டத்தில் ஈடுபட இளைஞர்கள், மாணவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமூக அமைப்புகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் தயார் என அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com